19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு தென்னாப்பிரிக்க அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.
கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஷ்லே வான் விக் மிரட்டலாகப் பந்துவீச, ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தடுமாறியது. அதிகபட்சமாக பிரே என்பவர் 36 ரன்கள் எடுத்தார். இவருடைய ஸ்டிரைக் ரேட் 81.81.
பிரிஸ்கோ என்பவர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இவருடைய ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர் ஜெம்மா போதா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். இதனால், 6 ஓவர்களில் அந்த அணி 50 ரன்கள் எடுத்தது.
அடுத்து வந்த பேட்டர்கள் நிதானமாக விளையாடி வெற்றி இலக்கை அடைய உதவினார்கள். 18.1 ஓவரில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத தென்னாப்பிரிக்க அணி, 19 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணியை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது.
2023 முதல் ஐசிசி நடத்தும் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
2023 - மகளிர் டி20 உலகக் கோப்பை (தோல்வி)
2024 - ஆடவர் டி20 உலகக் கோப்பை (தோல்வி)
2024 - மகளிர் டி20 உலகக் கோப்பை (தோல்வி)
2025 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
2025 - யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை