டபிள்யுடிசி இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா!

டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு இரண்டாவது அணியாகத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை இடையே போட்டி நிலவுகிறது.
டபிள்யுடிசி இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா!
படம்: https://x.com/ICC
1 min read

செஞ்சூரியன் டெஸ்டில் பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல்முறையாக டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை 2-0 என தென்னாப்பிரிக்காவும் ஒருநாள் தொடர 3-0 என பாகிஸ்தானும் முழுமையாக வென்றன.

இதைத் தொடர்ந்து இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் விளையாடி வருகின்றன.

முதல் டெஸ்ட் டிசம்பர் 26 அன்று செஞ்சூரியனில் பாக்ஸிங் டே டெஸ்டாக தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 211 ரன்களும் தென்னாப்பிரிக்கா 301 ரன்களும் எடுத்தன.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தென்னாப்பிரிக்காவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது.

இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானின் முஹமது அபாஸ் அற்புதமாகப் பந்துவீச தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 2021-க்கு பிறகு டெஸ்டில் மீண்டும் களமிறங்கிய அபாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க பேட்டர்களை நடுக்கம் காண வைத்தார்.

இதையடுத்து, ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சென் சிறப்பாகக் கூட்டணி அமைத்து, பதற்றம் இல்லாமல் 51 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க வெற்றியை உறுதி செய்தார்கள். 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ககிசோ ரபாடா 26 பந்துகளில் 31 ரன்களும் மார்கோ யான்சென் 16 ரன்களும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு தென்னாப்பிரிக்கா முதல்முறையாக தகுதி பெற்றுள்ளது. நடப்பு டபிள்யுடிசியில் 11 டெஸ்டுகளில் விளையாடி 7 வெற்றிகள் மற்றும் 66.67% புள்ளிகளைப் பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா.

முதல் இன்னிங்ஸில் 89 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 37 ரன்களும் எடுத்த எய்டன் மார்க்ரம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

டபிள்யுடிசி இறுதிச் சுற்றுக்கு இரண்டாவது அணியாகத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை இடையே போட்டி நிலவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in