இங்கிலாந்து மீண்டும் தோல்வி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா

பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே துபாய் விரைகின்றன.
இங்கிலாந்து மீண்டும் தோல்வி: அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
Akhtar Soomro
2 min read

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் கராச்சியில் இன்று மோதின.

பி பிரிவில் இதுவே கடைசி லீக் ஆட்டம். ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா தலா 3 புள்ளிகளில் இருந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்தினால் தென்னாப்பிரிக்கா அரையிறுதியை உறுதி செய்துவிடும் என்ற நிலை இருந்தது. இங்கிலாந்திடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், மிகப் பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் நெட் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவை முந்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் தான் இந்த ஆட்டம் தொடங்கியது.

அதேசமயம், இங்கிலாந்து கேப்டனாக ஜாஸ் பட்லருக்கு இது கடைசி ஆட்டம். இதில் டாஸ் வென்ற ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்காவில் காயம் காரணமாக டெம்பா பவுமாவுக்குப் பதில் எய்டன் மார்க்ரம் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இங்கிலாந்துக்கு இந்த முறையும் தொடக்க பேட்டர் ஃபில் சால்ட், மூன்றாவது பேட்டர் ஜேமி ஸ்மித் சோபிக்கவில்லை. இருவரும் முறையே 8 மற்றும் 0 ரன்களுக்கு மார்கோ யான்செனின் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார்கள்.

இதனால், கூட்டணியைக் கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் இங்கிலாந்து ஏற்பட்டது. இந்த முறையும் ஜோ ரூட் வசமே அந்த அழுத்தம் இருந்தது. பென் டக்கெட் சற்று வேகமாக ரன் குவித்தாலும் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பேட்டர்களும் பெரிய ஸ்கோரை எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ஜோ ரூட் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டமிழக்கும் வரை தாக்குப்பிடித்த விளையாடிய பட்லரும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்காவில் மார்கோ யான்சென் மற்றும் வியான் முல்டர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

179 ரன்களுக்கு இங்கிலாந்தைச் சுருட்டியதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்து இலக்கை விரட்ட முடியாமல் தோல்வியடைந்தாலும், ஆப்கானிஸ்தான் நெட் ரன்ரேட்டை விட குறைவான நெட் ரன்ரேட்டுக்கு செல்ல முடியாது என்பதால் தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

180 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தொடக்க பேட்டராக களமிறக்கப்பட்டார். இவர் டக் அவுட் ஆனார். ரியன் ரிக்கெல்டன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ரசி வான்டர் டுசன் மற்றும் ஹெயின்ரிக் கிளாசென் சிறப்பாகக் கூட்டணி அமைத்து விளையாடினார்கள். ரசி வான்டர் டுசன் 72 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசென் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த இணை வெற்றி இலக்கை அடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 56 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த கிளாசென், 29-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

29.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரையிறுதி வாய்ப்பையும் வெற்றி பெற்று உறுதி செய்தது தென்னாப்பிரிக்கா.

பி பிரிவில் 5 புள்ளிகளைப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

துபாய் அரையிறுதியால் குழப்பம்

அரையிறுதியில் எந்த அணி இந்தியாவையும், எந்த அணி தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ளும் என்பது இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து அமையும்.

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அணி துபாயில் விளையாட வேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கையாக பி பிரிவிலிருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே துபாய் விரைகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் நிறைவடைந்தவுடன் தென்னாப்பிரிக்க அணி துபாய் புறப்படுகிறது.

எந்த அணியாக இருந்தாலும், துபாய் சூழலுக்குப் பொருந்த அவகாசம் வேண்டும் என்பதால் அதற்கான போதிய நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரு அணிகளுமே துபாய் விரைவதாக ஐசிசிக்கு நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன.

முதல் அரையிறுதி ஆட்டம் துபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதி ஆட்டம் லாகூரில் புதன்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்துக்குப் பிறகு, அரையிறுதி குறித்த தெளிவு கிடைத்தவுடன் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாட வேண்டிய அணி லாகூர் திரும்பும்.

அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தது. இதனால், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி இருவேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே இந்தப் பயணக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரையிறுதியில் யாருடன் யார் மோத வாய்ப்பு

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் முதல் அரையிறுதியில் இந்திய அணி துபாயில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி லாகூரில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்தியா நியூசிலாந்து இடையிலான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், முதல் அரையிறுதியில் இந்திய அணி துபாயில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும். இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி லாகூரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in