மில்லரின் கேட்சை பிடித்த அந்த 5 நொடிகள்: மனம் திறந்த சூர்யகுமார் யாதவ்

இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த பரிசாக அந்த கேட்சைப் பார்க்கிறேன்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் ANI

மில்லரின் கேட்சை பிடிக்கும் போது பவுண்டரி எல்லைக் கோட்டை மிதிக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன் என சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் மில்லர் சிக்ஸரை நோக்கி அடிக்க, பவுண்டரி எல்லையில் சிறப்பாகச் செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் அதனை கேட்சாக மாற்றினார்.

இந்த உலகக் கோப்பையின் சிறந்த கேட்ச் என்றே அதை கூறலாம்.

ஒரு வேளை அந்த பந்தில் சிக்ஸர் சென்றிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம்.

இந்நிலையில் மில்லரின் கேட்சை பிடித்த அந்த 5 நொடிகளில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது: “பந்து என்னை நோக்கி வந்தவுடன் நான் ரோஹித் சர்மாவை பார்த்தேன், அவரும் என்னை நோக்கினார். நான் பந்தை நோக்கி ஓடினேன். அவர் எனக்கு அருகில் இருந்திருந்தால், அவரிடம் பந்தை வீசியிருப்பேன்.

அந்த 5 நொடிளில் என்ன நடந்தது என்று என்னால் விளக்க முடியாது. ஆனால், பந்தை பிடித்தவுடன் பவுண்டரி எல்லைக் கோட்டை மிதிக்கவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

மீண்டும் பந்தை வீசும் போது எல்லைக் கோட்டை மிதித்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். ஒரு வேளை அந்த பந்தில் சிக்ஸர் சென்றிருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்.

இது போன்ற கேட்சுகளை பிடிக்க நான் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன், இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த பரிசாக அந்த கேட்சைப் பார்க்கிறேன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in