பும்ரா இல்லாதபோதெல்லாம் சீறி எழும் சிராஜ்!

பும்ரா மட்டும் இல்லாதபோது சிராஜ்: டெஸ்ட் - 15; பந்துவீச்சு சராசரி - 25.20
பும்ரா இல்லாதபோதெல்லாம் சீறி எழும் சிராஜ்!
ANI
2 min read

பும்ரா இருக்கும்போது 33.82 சராசரியில் பந்துவீசும் சிராஜ், பும்ரா இல்லாதபோது, 25.2 சராசரியில் பந்துவீசுகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத இந்திய அணி 2-வது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது, பந்துவீச்சுக்கு சாதகமாக எந்த உதவியும் இல்லாத ஆடுகளத்தில் பும்ரா இல்லாத இந்திய பந்துவீச்சு படை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கேள்விகளுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலளித்துள்ளார் முஹமது சிராஜ்.

இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. எந்தெந்த டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என்பது சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணித் தரப்பில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி 371 ரன்கள் எனும் வெற்றி இலக்கை அடைந்து இந்தியாவை வீழ்த்தியது. பும்ரா விக்கெட் வீழ்த்தாவிட்டால் இந்தியாவின் நிலை இது தான், பும்ராவை மட்டுமே இந்தியா சார்ந்திருக்கக் கூடாது என பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணி மீது வைக்கப்பட்டன.

பிர்மிங்கமில் நடைபெற்று வரும் டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரை அணியில் வைத்துக்கொண்டு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கும்போது அவருக்கு ஓய்வு வழங்குவதை புரிந்துகொள்ள முடியவில்லை என ரவி சாஸ்திரி, டேல் ஸ்டெயின் உள்பட ஏராளமானோர் குரல் எழுப்பினார்கள். ஆனால், பும்ரா இல்லையென்றால் என்ன நான் இருக்கிறேன் என பந்துவீச்சில் சீறிப் பாய்ந்திருக்கிறார் சிராஜ்.

பிர்மிங்கம் டெஸ்டின் இரண்டாவது நாளில் தொடக்க பேட்டர் ஸாக் கிராலேவை வீழ்த்தியிருந்தார் சிராஜ். மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. முதல் ஓவரிலேயே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 70.76 சராசரி வைத்துள்ள ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை முதல் பந்திலேயே வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் முதல் பந்தில் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை.

இதன்பிறகு, ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் 6-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் சேர்த்தார்கள். ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தி ஆகாஷ் தீப் திருப்புமுனை உண்டாக்கினார். இதன்பிறகு, புதிய பந்து மூலம் கிடைத்த உதவியைப் பயன்படுத்தி கடைசி மூன்று விக்கெட்டுகளை இரு ஓவர்களில் வீசி கலக்கினார். இங்கிலாந்தில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன்முறை. பிர்மிங்கம் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 19.3 ஓவர்கள் வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பும்ரா இல்லாத பந்துவீச்சு படையா என ரசிகர்கள் நடுங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளார் சிராஜ். ஆனால், பும்ரா இல்லாதபோது தான் சிராஜின் செயல்பாடுகள் வேடிக்கையாக உள்ளது.

பும்ரா, முஹமது ஷமி இல்லையெனில் பந்துவீச்சு படையை வழிநடத்த வேண்டிய பொறுப்பு சிராஜுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பு அவருக்குப் பெரும் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. இதைத் தரவுகள் உறுதி செய்கின்றன.

ஜஸ்பிரித் பும்ராவுடன் சேர்ந்து விளையாடியபோது சிராஜ்

  • டெஸ்ட் - 23

  • பந்துவீச்சு சராசரி - 33.82

முஹமது ஷமியுடன் சேர்ந்து விளையாடியபோது சிராஜ்

  • டெஸ்ட் - 9

  • பந்துவீச்சு சராசரி - 34.96

பும்ரா, ஷமியுடன் சேர்ந்து விளையாடியபோது சிராஜ்

  • டெஸ்ட் - 6

  • பந்துவீச்சு சராசரி - 33.05

பும்ரா மட்டும் இல்லாதபோது சிராஜ்

  • டெஸ்ட் - 15

  • பந்துவீச்சு சராசரி - 25.20

பும்ரா, ஷமி இருவரும் இல்லாதபோது சிராஜ்

  • டெஸ்ட் - 12

  • பந்துவீச்சு சராசரி - 22.27

டெஸ்டில் சிராஜ் ஓர் இன்னிங்ஸில் நான்கு முறை 5 அல்லது 5+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் மூன்று முறை பும்ரா இல்லாதபோது தான் அவர் 5 அல்லது 5+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

  • டெஸ்டில் சிராஜ் ஓர் இன்னிங்ஸில் 5 அல்லது 5+ விக்கெட்டுகள் எடுத்தது - 4 முறை

  • பும்ரா இருந்தபோது சிராஜ் 5 அல்லது 5+ விக்கெட்டுகள் எடுத்தது - 1 முறை

  • பும்ரா இல்லாதபோது சிராஜ் 5 அல்லது 5+ விக்கெட்டுகள் எடுத்தது - 3 முறை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in