சிராஜுக்கு அபராதம் விதித்துள்ளது அபத்தமானது: ஸ்டுவர்ட் பிராட் | Stuart Broad

"ஒன்று இருவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் அல்லது யாருக்கும் அபராதம் விதிக்கக் கூடாது."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முஹமது சிராஜுக்கு அபராதம் விதித்துள்ளது அபத்தமானது என இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் தலா 387 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து, இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காவது ஆட்டத்தின் தொடக்கத்தில் பென் டக்கெட் விக்கெட்டை முஹமது சிராஜ் வீழ்த்தினார்.

இவருடைய விக்கெட்டை மிகவும் ஆக்ரோஷமான முறையில் கொண்டாடினார் சிராஜ். மேலும், இருவரும் தோளோடு தோள் உரசிச் சென்றார்கள். சிராஜின் இந்த ஆக்ரோஷமான கொண்டாட்டத்துக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஓர் அபராதப் புள்ளி மற்றும் ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முஹமது சிராஜுக்கு மட்டும் அபராதம் விதித்ததற்கு இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

"சிராஜின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்துக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அபத்தமானது. ஷுப்மன் கில் தொலைக்காட்சியில் நேரலையில் இழிவான சொற்களைப் பயன்படுத்தினார். ஒன்று இருவருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் அல்லது யாருக்கும் அபராதம் விதிக்கக் கூடாது. வீரர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க ரோபோக்கள் கிடையாது, ரோபோக்களாகவும் இருக்க முடியாது. ஆனால், நடவடிக்கை எடுப்பதில் ஒரே நிலை தொடர வேண்டும்" என்று ஸ்டுவர்ட் பிராட் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆட்டமிழந்த பிறகு, இங்கிலாந்து பேட்டிங்கில் இரு ஓவர்களை வீசுவதற்கான நேரம் இருந்தது. ஆனால், இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் வேண்டுமென்ற தாமதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், கேப்டன் ஷுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடக்க பேட்டர்களுடன் ஆக்ரோஷமான முறையில் பேசினார்கள். இவர்களில் ஷுப்மன் கில்லின் பேச்சு பெரிதளவில் கவனம் பெற்றது. இதைக் குறிப்பிட்டே ஸ்டுவர்ட் பிராட் இந்தப் பதிவை பதிவிட்டுள்ளார்.

Mohammed Siraj | Ind v Eng | India vs England | India v England | Ind vs Eng | Ben Duckett | Lord's Test | India Tour of England | India England Test Series | Stuart Broad

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in