மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தில்லியில் கடந்த அக்டோபர் 10 அன்று தொடங்கியது. டெஸ்ட் கேப்டனாக முதல்முறையாக டாஸ் வென்ற ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
யஷஸ்வி ஜெயிஸ்வால், ஷுப்மன் கில் சதமடிக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 270 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஃபாலோ ஆன் செய்யுமாறு இந்திய அணி அழைத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜான் கேம்பெல் மற்றும் ஷே ஹோப் சதமடித்து நம்பிக்கையளித்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜேடன் சீல்ஸ் 79 ரன்கள் சேர்க்க, மேற்கிந்தியத் தீவுகளின் முன்னிலை 100 ரன்களை தாண்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 390 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. கேஎல் ராகுல் 25 ரன்களுடனும் சாய் சுதர்சன் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றியை உறுதி செய்வதற்கு முன்பே சாய் சுதர்சன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஷுப்மன் கில்லும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரு விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ராஸ்டன் சேஸ் வீழ்த்தினார்.
எனினும், தொடக்க பேட்டர் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் 58 ரன்களுடனும் துருவ் ஜுரெல் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இரு டெஸ்டுகளிலும் வென்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது இந்திய அணி. கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு ஷுப்மன் கில் வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இது. ஆட்டநாயகன் விருதை 8 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப் யாதவ் வென்றார். தொடர் நாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 7 டெஸ்டுகளில் 4 வெற்றிகளைப் பெற்று 61.9 சதவீதப் புள்ளிகளுடன் இந்திய அணி 3-வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக நவம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
Delhi Test | Ind v WI | KL Rahul | Shubman Gill | Ravindra Jadeja | Kuldeep Yadav | India v Windies | India v West Indies |