ஷுப்மன் கில் இந்திய அணிக்காக என்னதான் செய்தார்?: பத்ரிநாத் காட்டம்

ஷுப்மன் கில் அணிக்கு ஆற்றிய பங்களிப்பு என்ன என்ற கேள்வி தன் மனதில் உள்ளதாக பத்ரிநாத் கடும் விமர்சனம்.
ஷுப்மன் கில் இந்திய அணிக்காக என்னதான் செய்தார்?: பத்ரிநாத் காட்டம்
ANI
1 min read

ஷுப்மன் கில்லின் பெயர் சுப்பிரமணியம் என்றிருந்தால், அவரை அணியிலிருந்து நீக்கியிருப்பார்கள் என முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணியின் பேட்டிங் ஃபார்ம் மிகப் பெரிய விமர்சனத்துக்குள்ளானது. ரோஹித் சர்மா, விராட் கோலி குறித்து எழுந்த விமர்சனங்கள் ஷுப்மன் கில் குறித்தும் எழத் தொடங்கியுள்ளது. 2021-ல் பிரிஸ்பேன் டெஸ்டில் 91 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, ஆசியாவுக்கு வெளியே 18 இன்னிங்ஸில் ஒரு அரைசதம்கூட கில் அடிக்கவில்லை.

மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரராக இருந்திருந்தால், அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார் என முன்னாள் வீரர் பத்ரிநாத் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

"ஷுப்மன் கில்லின் பெயர் சுப்பிரமணியம் என்றிருந்தால், அவரை அணியிலிருந்து நீக்கியிருப்பார்கள். அவர் ஆட்டமிழந்ததை மீண்டும் பார்க்க கஷ்டமாக உள்ளது. அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்துள்ளார் ஷுப்மன் கில்.

நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். நீங்கள் ஆட்டமிழக்கலாம், ரன் எடுக்கலாம், ரன் எடுக்காமல் இருக்கலாம். ஆனால், ஏதேனும் ஒரு முனைப்பும் மனோபாவமும் இருக்க வேண்டும். நீங்கள் விளையாடியாக வேண்டும், எதிரணி பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்ய வேண்டும், நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பந்தை பழையதாக ஆக்குங்கள்.

உங்களுக்குப் பிறகு வரும் சக வீரருக்காவது உதவுங்கள், ரன் வராவிட்டாலும் பரவாயில்லை. களத்தில் நில்லுங்கள். 50, 100 பந்துகள் விளையாடி பந்தை பழையதாக்குங்கள். இதுதான் நீங்கள் அணிக்குச் செலுத்தும் பங்களிப்பு.

ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஷேன் இதைத்தான் செய்தார். மெக்ஸ்வீனியும் விளையாடிய இரு டெஸ்டுகளில் இதைச் செய்தார். நிறைய பந்துகளை எதிர்கொண்டு இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தார். பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்ததால் தான், பும்ரா கடைசி டெஸ்டில் காயமடைந்துவிட்டார். அணிக்குச் செலுத்தும் பங்களிப்பாக இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

இதுதான் என்னுடைய ஆட்டம், இப்படிதான் நான் விளையாடுவேன், நின்றபடி நான் இப்படியே ஷாட் விளையாடுவேன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும், நிறைய பேர் என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதல்ல கிரிக்கெட்.

இங்கு பந்தைப் பழையதாக்க வேண்டும். உங்களால் என்ன செய்ய முடியுமோ, அந்தத் தருணத்தில் அதைச் செய்ய முயற்சிக்க வேண்டும். நீங்கள் ஆட்டமிழக்கலாம்.

ஆனால், இந்தத் தொடரில் ஷுப்மன் கில்லிடமிருந்து அதை நான் பார்க்கவில்லை. ஃபீல்டிங்கிலும் மிக மோசமாக இருந்துள்ளார். அவரால் ஸ்லிப் பகுதியில் ஃபீல்ட் செய்ய முடியாது, பாயிண்ட் போன்ற முக்கியமான இடங்களில் நிற்க முடியாது, சில்லி பாயிண்ட், ஷார்ட் லெக்கில் அற்புதமாகச் செயல்படுகிறாரா என்றால் அதுவும் செய்ய முடியாது. அவர் அணிக்கு என்ன மாதிரியான பங்களிப்பைச் செய்தார் என்ற கேள்வி என் மனதில் உள்ளது?" என்றார் பத்ரிநாத்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in