
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பிர்மிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் சாய் சுதர்சன், ஷார்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டார்கள்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 114 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இருவரும் நேற்று வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டத்தை இன்றும் வெளிப்படுத்தினார்கள். ஜடேஜா டெஸ்டில் 23-வது அரை சதத்தைக் கடந்தார். ஷுப்மன் கில் முதன்முறையாக டெஸ்டில் 150 ரன்களை கடந்தார். கில் - ஜடேஜா இணை 6-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 89 ரன்களுக்கு ஜாஷ் டங்கின் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஷுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார். கில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 180 ரன்களை தொட்டார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் எனும் மைல்கல்லை எட்டினார். ஷுப்மன் கில் 180 ரன்களிலிருந்து 200 ரன்களுக்கு விரைவாகச் சென்று சாதனை படைத்தார்.
இங்கிலாந்தில் இரட்டைச் சதமடித்த மூன்றாவது இந்தியர், முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.