
ஐபிஎல் இறுதிச் சுற்றில் ஆர்சிபியிடம் தோல்வியடைந்த ஷ்ரேயஸ் ஐயர், மும்பை டி20 லீக் போட்டியின் இறுதிச் சுற்றிலும் தோல்வியடைந்துள்ளார்.
ஐபிஎல் போட்டிக்குப் பிறகு மும்பை டி20 லீக் போட்டியில் சோபோ மும்பை ஃபால்கான்ஸ் அணியை வழிநடத்திய ஷ்ரேயஸ் ஐயர், அந்த அணியையும் இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்றார். இறுதிச் சுற்றில் மும்பை சௌத் சென்ட்ரல் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஷ்ரேயஸ் ஐயரின் அணி. பேட்டிங்கில் ஐபிஎல் இறுதிச் சுற்றில் சொதப்பிய ஷ்ரேயஸ் ஐயர், மும்பை டி20 லீக் இறுதிச் சுற்றிலும் 17 பந்துகளை எதிர்கொண்டு 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி சாம்பியன் ஆனது. பிறகு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரேயஸ் ஐயர். ரஞ்சி கோப்பை, இரானி கோப்பைப் போட்டிகளில் மும்பை அணி பட்டங்களை வென்றதிலும் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றதிலும் ஸ்ரேயஸ் ஐயரின் பங்களிப்பு இருந்தது.