களத்தில் மீண்டும் ஷ்ரேயஸ் ஐயர்: மும்பை கேப்டனாக அறிவிப்பு! | Shreyas Iyer |

கேப்டன் ஷார்துல் தாக்குர் காயம் காரணமாக விலக, காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷ்ரேயஸ் ஐயர் மாற்று வீரராக அறிவிப்பு.
Shreyas Iyer to lead Mumbai in Vijay Hazare Trophy
ஷ்ரேயஸ் ஐயர் (கோப்புப்படம்)
1 min read

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களுக்கு மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயஸ் ஐயருக்கு ஆஸ்திரேலிய பயணத்தின்போது கேட்ச் பிடித்தபோது நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரைத் தவறவிட்டார்.

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஷ்ரேயஸ் ஐயர் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது. இருந்தபோதிலும், ஷ்ரேயஸ் ஐயரின் இறுதித் தேர்வு அவருடைய உடற்தகுதியைப் பொறுத்தே அமையவுள்ளது.

உடல்நிலை தேறி வரும் அவர் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி 2 அன்று பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் விளையாடினார். இந்நிலையில் தான் விஜய் ஹசாரே கோப்பபைப் போட்டியில் பங்கேற்கிறார்.

இப்போட்டியில் மும்பைக்கு இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ளன. ஜனவரி 6 அன்று ஹிமாச்சலப் பிரதேசத்துக்கு எதிராகவும் ஜனவரி 8 அன்று பஞ்சாபுக்கு எதிராகவும் விளையாடுகிறது. இவ்விரு ஆட்டங்களிலும் மும்பை அணியை ஷ்ரேயஸ் தான் வழிநடத்தப்போகிறார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் மும்பை அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆல்-ரவுண்டர் ஷார்துல் தாக்குர் தலைமையில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது. ஷார்துல் தாக்குர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு மாற்றாகவே ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை அணி நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. ஷ்ரேயஸ் ஐயர் உடல்தகுதியை நிரூபித்து நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டால், விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியின் நாக்-அவுட் சுற்றில் இவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம், மும்பை அணி மீண்டும் புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

Summary

Shreyas Iyer to lead Mumbai in Vijay Hazare Trophy

Shreyas Iyer | Vijay Hazare Trophy | Mumbai | New Zealand ODI Series |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in