
இந்திய அணிக்குத் தேர்வாகாதபோது, அது எரிச்சலடையச் செய்யும் என இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் மௌனம் கலைத்துள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் பெயர் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்தது. ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக இரு அணிகளை இறுதிச் சுற்று வரை அழைத்துச் சென்ற கேப்டன். இதில் 2024-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்தவர். 2014-க்கு பிறகு முதல்முறையாக பஞ்சாப் கிங்ஸை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
அணியைச் சிறப்பாக வழிநடத்தியது மட்டுமில்லாமல், 17 ஆட்டங்களில் 50.33 சராசரியில் 175.07 ஸ்டிரைக் ரேட்டில் 604 ரன்கள் குவித்து பேட்டிங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதன்பிறகும் இந்திய அணியில் ஒருவருக்கு இடம் கிடைக்கவில்லையெனில், வேறென்ன தான் செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் iQOO இந்தியா பாட்காஸ்டில் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், அணியில் இடம் கிடைக்காதபோது இருக்கும் மனநிலை குறித்து பேசியுள்ளார்.
"அணியில் இடம்பெறுவதற்கானத் தகுதி இருந்தும் இடம் கிடைக்காதபோது, அது எரிச்சலையே உண்டாக்கும். அந்த நேரத்தில் எரிச்சலாகவே இருக்கும்.
அதேசமயம், ஒரு வீரர் சிறப்பாகச் செயல்படும்போது, அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும்போது, தன்னுடைய சிறப்பை வெளிக்கொண்டு வரும்போது, நாம் அதை ஆதரிக்க வேண்டும். காரணம், அணி வெற்றி பெற வேண்டும் என்பதே நம் இலக்கு. அணி வெற்றி பெற்றால், அது அனைவருக்கும் மகிழ்ச்சியே" என்றார் ஷ்ரேயஸ் ஐயர்.
மேலும், "நமக்கு வாய்ப்பு கிடைக்காதபோதும், நம் வேலையை நாம் சரியாகச் செய்ய வேண்டும். யாராவது நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே வேலையைச் செய்ய வேண்டும் என்றில்லை. யாரும் பார்க்காதபோதும்கூட, நம் வேலையை நாம் சரியாகச் செய்துகொண்டிருக்க வேண்டும்" என்றார் ஷ்ரேயஸ் ஐயர்.
ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காத ஷ்ரேயஸ் ஐயருக்கு ஆறுதலாக இந்திய ஏ அணியை வழிநடத்தும் பொறுப்பு கிடைத்துள்ளது. செப்டம்பர், அக்டோபரில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் இரு நான்கு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய ஏ அணியை ஷ்ரேயஸ் ஐயர் தான் வழிநடத்துகிறார்.
Shreyas Iyer | Asia Cup | Team India | BCCI | Indian Cricket Team |