
இங்கிலாந்துடனான டி20 தொடரிலிருந்து நிதிஷ் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளார்கள்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 கொல்கத்தாவில் ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றி பெற்றது.
இரண்டாவது டி20 சென்னையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் டி20யில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரிங்கு சிங் காயம் காரணமாக இந்த டி20யில் விளையாடவில்லை. இவர்களுக்குப் பதில் துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்கள்.
நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக இங்கிலாந்து டி20 தொடர் முழுவதிலுமிருந்து விலகியுள்ளார். ரிங்கு சிங் குறைந்தபட்சம் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20யில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதில் இங்கிலாந்து டி20 தொடருக்கான மாற்று வீரர்களாக ஷிவம் துபே மற்றும் ரமண்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இருவரும் மூன்றாவது டி20-க்கு முன்பு இந்திய அணியுடன் இணையவுள்ளார்கள்.