பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்திய அணிக்காக 2010 முதல் 2022 வரை 34 டெஸ்டுகள், 167 ஒருநாள், 68 ஆட்டங்களில் விளையாடிய ஷிகர் தவன், டெஸ்டில் 7 சதங்களும் ஒருநாளில் 17 சதங்களும் எடுத்துள்ளார்.
இந்திய அணிக்காக இனிமேல் விளையாட முடியாது எனச் சோகமாக உணர வேண்டாம். பதிலாக, இந்திய அணிக்காக விளையாடியதை எண்ணிச் சந்தோஷப்படு என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஷிகர் தவன்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 40 ரன்கள் சராசரி, 90+ ஸ்டிரைக் ரேட்டுடன் 5000 ரன்கள் எடுத்த 8 பேரில் ஒருவர் என்கிற பெருமையை ஷிகர் தவன் கொண்டுள்ளார். டிசம்பர் 2022-க்குப் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மொஹாலியில் தனது முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 பந்துகளில் சதமடித்து, அதிவேகச் சதமடித்த அறிமுக வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். முதல் டெஸ்டிலேயே 174 பந்துகளில் 187 ரன்கள் எடுத்துக் கவனம் ஈர்த்தார்.
ஐபிஎல் போட்டியிலும் ஒரு சாதனையாளராகக் கருதப்படுகிறார். அடுத்தடுத்து சதமடித்த முதல் வீரர் என்கிற சாதனையை ஐபிஎல் போட்டியில் 2020-ல் படைத்தார். ஐபிஎல்-லில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரரும் தவன் தான்.
2003-04 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் 3 சதங்களுடன் 505 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார். எனினும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு 2010-ல் தான் அவருக்குக் கிடைத்தது.