
இந்திய வீரர் ஷார்துல் தாக்குருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடிய ஷார்துல் தாக்குருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அந்த தொடரில் இருந்து விலகினார். இதன் பிறகு காயத்திலிருந்து மீண்டு ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார். அரையிறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார் ஷார்துல் தாக்குர். ஏற்கெனவே, 2019-ல் இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதில் சி பிரிவில் ஷார்துல் தாக்குர் உள்ளதால், அவரது சிகிச்சைக்கான செலவை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து ஷார்துல் தாக்குர் மூன்று மாதங்களுக்கு விளையாடமாட்டார் என தெரிகிறது. எனவே காயத்திலிருந்து குணமடைந்து அக்டோபரில் தொடங்கவுள்ள உள்நாட்டு போட்டிகளில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.