
மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி விளையாடவுள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
பயிற்சியின் விளைவால் ஷமிக்கு முழங்கால் வீக்கம் ஏற்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மேலும் தாமதமாகும் என அறியப்பட்டது. பெங்கால் அணியின் முதல் 4 ரஞ்சி ஆட்டங்களிலும் ஷமி விளையாடவிலை. இதனால் ஆஸ்திரேலியாவில் பிஜிடி தொடரில் அவர் விளையாடுவது வாய்ப்பே இல்லை எனப் பார்க்கப்பட்டது. இந்திய அணியிலும் ஷமி இடம்பெறவில்லை. காயத்துடன் ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல ரோஹித் சர்மாவும் விருப்பப்படவில்லை.
இந்நிலையில் ஒரு ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி கோப்பை மூலம் கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் களமிறங்கவுள்ளார் முஹமது ஷமி.
நாளை (நவ. 13) தொடங்கவுள்ள மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக ஷமி விளையாடவுள்ளதாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் தனது உடற்தகுதியை ஷமி நிரூபிக்கும் பட்சத்தில் பிஜிடி தொடரில் கடைசி 3 டெஸ்டுகளுக்கான இந்திய அணியிலும் ஷமி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.