
பிஜிடி தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்துள்ளன.
கணுக்கால் காயம் காரணமாக 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காத ஷமி, சமீபத்தில் ரஞ்சி கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டங்களில் விளையாடினார். இருந்தும் பிஜிடி தொடருக்கான இந்திய அணியில் ஷமி சேர்க்கப்படவில்லை. அவருடைய முழங்காலில் வீக்கம் ஏற்பட்டதால் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே இந்திய அணியில் ஷமி சேர்க்கப்படுவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேட்டியளித்தார்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்கான பெங்கால் அணியில் இடம்பெற்றுள்ள ஷமிக்கு தில்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடுவதில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்டங்களில் விளையாடினால் மட்டுமே ஷமியின் உடற்தகுதியின் நிலைமை குறித்து பிசிசிஐக்குத் தெரியவரும். இதனால் பிஜிடி கடைசி இரு டெஸ்டுகளுக்கு முன்பு ஷமி முழு உடற்தகுதியை அடைவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இதையடுத்து பிஜிடி தொடருக்குப் பதிலாக பிப்ரவரியில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் ஷமியை விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிடும் எனக் கூறப்படுகிறது.