
காயத்தில் இருந்து 100 சதவீதம் குணமடைந்தால் மட்டுமே முஹமது ஷமியை அணியில் தேர்வு செய்வோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2014-15 பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றது.
முன்னதாக, இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (அக்.15) தொடங்குகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிஜிடி தொடரில் ஷமி விளையாடுவாரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்: “ஆஸ்திரேலியத் தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து தற்சமயத்தில் முடிவு எடுப்பது கடினம். அவருக்கு சமீபத்தில் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது அசாதாரணமான ஒன்று.
காயத்தில் இருந்து கிட்டதட்ட 100 சதவீதம் குணமடைந்து வந்து கொண்டிருந்த சூழலில், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. எனவே, அவர் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். தற்போது என்சிஏ-வில் பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.
100 சதவீதம் குணமடையாத நிலையில், ஷமியை ஆஸ்திரேலியத் தொடரில் சேர்ப்பது தவறான முடிவு. கடந்த ஒரு வருடமாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நீண்ட நாட்களுக்கு விளையாடாமல் இருந்து, உடனடியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு மிகவும் கடினமான ஒன்று.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பு அவர் இரண்டு ஆட்டங்களில் விளையாட வேண்டும். எனவே நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு ஷமியை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்வோம்”.
இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷமி, சமீபத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 6-8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியானது.