முஹமது ஷமி
முஹமது ஷமிANI

பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து விலகுகிறேனா?: முஹமது ஷமி விளக்கம்

ஷமி, கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடினார்.
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி, சமீபத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில் ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 6-8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியானது.

இதனால், நவம்பரில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஷமி பங்கேற்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஷமி.

ஷமி கூறியதாவது

“ஆதாரமற்ற வதந்திகளை ஏன் பரப்புகிறீர்கள்? நான் மீண்டு வருவதற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து நான் விலகுவதாக பிசிசிஐயோ அல்லது நானோ அறிவிக்கவில்லை. அதிகாரபூர்வமற்ற செய்திகளில் கவனம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். நான் அறிக்கை வெளியிடாமல், தயவு செய்து இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பாதீர்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in