மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற இந்தியா

ஹர்மன்பிரீத் கௌர் காயம் குறித்து பேசிய ஸ்மிருதி மந்தனா, "தற்போதைய நிலையில் எதுவும் கூற முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்" என்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் டி20 உலகக் கோப்பையை நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய இந்தியா, இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தானில் டி20-க்கு ஏற்ப ஆட்டம் வெளிப்படவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

இதற்கிடையே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. 9.3 ஓவர்களில் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 11.4-வது ஓவரில்தான் 50 ரன்களை தொட்டது.

கேப்டன் ஃபாதிமா சனா மட்டும் தான் பேட்டிங்கில் ஓரளவுக்கு முனைப்பு காட்டினார். 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த இவர் ஆஷா ஷோபனாவிடம் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிடா தார் 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும் ஷ்ரேயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளையும் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

106 ரன்கள் என்ற சௌகரியமான இலக்கை நோக்கி இந்திய மகளிர் களமிறங்கினார்கள். ஸ்மிருதி மந்தனா இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். இவரும் ஷெஃபாலி வர்மாவும் கூட்டணி அமைத்தார்கள்.

வழக்கத்துக்கு மாறாக நிதானம் காட்டி ஷெஃபாலி 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். மெமிமாவும் 82.14 ஸ்டிரைக் ரேட்டுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்மன் பிரீத் கௌர் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, காயம் காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இருந்தபோதிலும், தீப்தி ஷர்மா மற்றும் சஜனா வெற்றியை உறுதி செய்தார்கள். 18.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியன் மூலம் புள்ளிகள் கணக்கைத் தொடங்கிய இந்தியா ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு விழாவில் ஹர்மன்பிரீத் கௌருக்குப் பதில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பங்கேற்றார். ஹர்மன்பிரீத் காயம் குறித்து பேசிய இவர், "தற்போதைய நிலையில் எதுவும் கூற முடியாது. மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in