டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா நடப்பு சாம்பியன்?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 3 வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
பட்லர்
பட்லர்ANI
2 min read

டி20 உலகக் கோப்பை தொடங்கி 24 ஆட்டங்கள் முடிந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 3 வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு சற்று குறைவாகவே இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய அணிகள் என்ன செய்ய வேண்டும்?

பாகிஸ்தான்:

3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளில் இருக்கும் பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படி இந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்து வெளியேறும். பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அமெரிக்க அணியின் முடிவுகளைப் பொருத்தே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிப் பெறுமா என்பது தெரியவரும். அமெரிக்க அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளது. இதில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதிப் பெற போதுமானதாக இருக்கும். ஆனால் இரு அணிகளின் ரன்ரேட்டில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் அமெரிக்க அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் பெரிய தோல்வியைச் சந்திக்காமல் இருக்க வேண்டும். இரு ஆட்டங்களிலும் 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடும் பட்சத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலே அமெரிக்க அணியைவிட பாகிஸ்தான் அணி ரன்ரேட்டில் முன்னிலை பெறும்.

இங்கிலாந்து:

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இன்னும் ஓமன் மற்றும் நமீபிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. இப்பிரிவில் ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இனிவரும் 2 ஆட்ட்ங்களில் வெற்றி பெற்றால் 5 புள்ளிகளை பெறும். ஆனால், ஸ்காட்லாந்து அணி நல்ல ரன்ரேட்டுடன் இருப்பதால் இங்கிலாந்து அணி பெரிய வெற்றிகளைப் பெற வேண்டும். அதாவது, இரு ஆட்டங்களையும் சேர்த்து 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஸ்காட்லாந்து அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையும் பட்சத்தில் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை விட அதிகமான ரன்ரேட்டை பெறும். இங்கிலாந்து அணி விளையாடும் ஆட்டங்களும் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படி நடந்தால் இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு கலைந்துவிடும்.

இலங்கை:

இலங்கை அணிக்கு வீரர்களுடன் சேர்ந்து மழையும் உதவினால் மட்டுமே அந்த அணி அடுத்தச் சுற்றுக்குத் தகுதிப் பெற முடியும். 1 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும் இலங்கை அணி, வங்தேசம் - நெதர்லாந்து ஆட்டத்தில் முடிவு கிடைத்தாலே வெளியேறும். இதில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் 4 புள்ளிகளைப் பெறும். அப்படி நடந்தால் இலங்கை அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வெளியேறும். ஒருவேளை அந்த ஆட்டம் மழையால் ரத்து ஆகி, நேபாள் அணி வங்கதேசத்தை வீழ்த்தி, இலங்கை அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மூன்று அணிகளும் 3 புள்ளிகளுடன் இருக்கும். அவ்வாறு நடந்தாலும் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நல்ல ரன்ரேட் தேவைப்படும்.

நியூசிலாந்து:

முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த நியூசிலாந்து அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளது. நியூசிலாந்து அணி மூன்றிலும் வெற்றி பெற்று, மே.இ. தீவுகள் அணி தனது இரு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தால், நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். ஒருவேளை மே.இ. தீவுகள் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி தனது இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்து அணி சூப்பர் 8 வாய்ப்பை இழந்து வெளியேறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in