
சர்ஃபராஸ் கான் அண்மையில் பகிர்ந்த புகைப்படம் பெரியளவில் பேசுபொருளானது.
சர்ஃபராஸ் கானா இது என்று வியக்கும் அளவுக்கு 17 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்திருக்கிறார்.
இந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி? எத்தனை மாதங்களில் எத்தனை கிலோ எடையைக் குறைத்தார்?
மும்பையைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ் கான். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்து வருபவர்களில் சர்ஃபராஸ் கான் முதன்மையான வீரர். முதல் தர கிரிக்கெட்டில் 55 ஆட்டங்களில் 16 சதங்கள் உள்பட 65.98 சராசரியில் 4,685 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கிடைப்பதில்லை என எழாத குரல்கள் இல்லை.
ஒருவழியாகக் கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். முதல் மூன்று டெஸ்டுகளில் மூன்று அரை சதங்களை அடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து 150 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல தொடக்கமாக அமைந்தது. சுழற்பந்துவீச்சைத் திறம்படக் கையாள்கிறார் என்ற பெயரை சர்வதேச கிரிக்கெட்டிலும் தக்கவைத்தார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவித்தாலும் டெஸ்டில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் சர்ஃபராஸ் கானின் உடற்தகுதி எப்போதும் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. டெஸ்டில் அறிமுகமாக தாமதமானதற்கு உடற்தகுதி ஒரு காரணமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் எழாமல் இல்லை.
விமர்சனங்களுக்கேற்ப, நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் அடுத்த 4 இன்னிங்ஸில் மொத்தம் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார் சர்ஃபராஸ் கான். பிஜிடி தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தாலும் ஒரு டெஸ்டில் கூட அவர் விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டுகள் கொண்ட தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை. சாய் சுதர்சன், கருண் நாயர் மீது நம்பிக்கை வைத்தது தேர்வுக் குழு.
எனினும், இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்துக்குப் பயணம் செய்து இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடினார். இதில் 92 ரன்கள் குவித்தார். கேஎல் ராகுல் விளையாடுவதற்காக இரண்டாவது டெஸ்டில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சர்ஃபராஸ் கான் தான் எதில் மேம்பட வேண்டும் என்பதை உணர்ந்து, அதில் கூடுதல் கவனத்தைச் செலுத்தி அதிக நேரத்தைச் செலவிட்டார்.
உடற்தகுதிக்காகக் கடுமையான உழைப்பைச் செலுத்திய சர்ஃபராஸ் கான், சுமார் 17 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் சர்ஃபராஸ் கான். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், "நிச்சயமாக இது ஆட்டத்தை மேம்படுத்தும் மற்றும் நல்ல ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வழிவகுக்கும். உனக்கான முக்கியத்துவத்தை மாற்றியமைத்து அதற்காக நேரம் செலவிட்டுள்ளது எனக்குப் பிடித்துள்ளது" என்று சர்ஃபராஸ் கானைப் பாராட்டித் தள்ளினார். மேலும், சர்ஃபராஸ் கான் உடல் எடையைக் குறைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, இதை யாராவது பிரித்வி ஷாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
குறுகிய இடைவெளியில் 17 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்தது எப்படி சாத்தியமானது என்பதை சர்ஃபராஸ் கானின் தந்தை நௌஷத் கான் கடந்த மே மாதம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.
"உணவு பழக்கத்தை நாங்கள் பன்மடங்கு கட்டுப்படுத்தியுள்ளோம். ரொட்டி, அரிசி சார்ந்த உணவு உள்ளிட்டவற்றை உண்பதை நிறுத்திவிட்டோம். ஒன்று, ஒன்றை மாதங்களுக்கு வீட்டில் நாங்கள் ரொட்டி அல்லது அரிசி சார்ந்த உணவு எதையுமே உண்ணவில்லை. பிரோக்கோலி, கேரட், வெள்ளரிக்காய், பழங்கள் (Salad) மற்றும் பச்சைக் காய்கறிகள் மட்டும் தான் பருகினோம். கிரீன் டீ மற்றும் கிரீன் காஃபி எடுத்துக்கொள்கிறோம். அவகேடோஸ் சாப்பிடுகிறோம். தானிய உணவுகளையும் (Sprouts) எடுத்துக்கொள்கிறோம். ரொட்டி மற்றும் அரிசி சார்ந்த உணவுகளை நிறுத்தியது தான் முக்கியம். சர்க்கரையை எடுத்துக்கொள்வதை நிறுத்தினோம். மைதா மற்றும் பேக்கரி பொருள்களை எடுத்துக்கொள்வதையும் நிறுத்தினோம்" என்றார் நௌஷத் கான்.
அடுத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளன. நிராகரிப்பால் உடல் எடையைக் குறைத்து மிகுந்த உத்வேகத்துடன் உள்ள சர்ஃபராஸ் கான், உள்நாட்டு கிரிக்கெட் பருவத்திலும் சாதித்து மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என நம்புவோம்.
Sarfaraz Khan | Team India | BCCI | BCCI Selection | Weight Loss | Kevin Pietersen