
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது நாளிலிருந்து ஆட்டம் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்குச் சுருண்டது.
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவித்து 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் விராட் கோலி 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. அரைசதம் அடித்து களத்திலிருந்த சர்ஃபராஸ் கான், நான்காம் நாள் ஆட்டத்திலும் நேர்மறையான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து வந்த அவர், 110-வது பந்தில் பவுண்டரி அடித்து முதல் டெஸ்ட் சதத்தை எட்டினார்.
மறுமுனையில் ரிஷப் பந்த் தொடக்கத்தில் நிதானம் காட்டி விளையாடி, 25 பந்துகளை எதிர்கொண்ட பிறகு ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். டிம் சௌதி ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அஜாஸ் படேல் ஓவரில் இரு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என விளாச இந்திய அணி பின்தங்கியிருந்த ரன் 50-க்கு கீழ் குறைந்தது.
கிளென் ஃபிளிப்ஸ் பந்தில் பவுண்டரி அடித்த ரிஷப் பந்த், 55-வது பந்தில் டெஸ்ட் அரைசதத்தை எட்டினார். இவர் அரைசதம் அடித்தவுடன் காலை 11 மணியளவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, 11.20 மணிக்கு முன்கூட்டியே உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.
நான்காம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து 12 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.
நான்காம் நாள் ஆட்டத்தில் கூட்டணியைத் தொடங்கிய சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் இணை 132 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
உணவு இடைவேளை முடிந்து நண்பகல் 12 மணிக்கு ஆட்டம் தொடங்கியிருக்க வேண்டும். மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.