
இந்திய வீரர் சர்ஃபராஸ் கான் 17 கிலோ அளவுக்கு எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், சர்ஃபராஸ் கான் எடையைக் குறைத்துள்ள இந்தப் படத்தை யாராவது பிரித்வி ஷாவிடம் காண்பிக்க வேண்டும் என எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் சர்ஃபராஸ் கான். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்து வருபவர்களில் சர்ஃபராஸ் கான் முதன்மையான வீரர். முதல் தர கிரிக்கெட்டில் 55 ஆட்டங்களில் 16 சதங்கள் உள்பட 65.98 சராசரியில் 4,685 ரன்கள் குவித்துள்ளார்.
இவர் கடந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். முதல் மூன்று டெஸ்டுகளில் மூன்று அரை சதங்களை அடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் சதமடித்து 150 ரன்கள் எடுத்தார். அடுத்த 4 இன்னிங்ஸில் மொத்தம் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார் சர்ஃபராஸ் கான்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவித்தாலும் டெஸ்டில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் சர்ஃபராஸ் கானின் உடற்தகுதி எப்போதும் ஒரு கேள்வியாகவே இருந்து வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லை.
எனினும், இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்துக்குப் பயணம் செய்து இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடினார். இதில் 92 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, உடற்தகுதியை மேம்படுத்த கடுமையான உழைப்பைச் செலுத்தத் தொடங்கினார். விளைவு 17 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் சர்ஃபராஸ் கான்.
சர்ஃபராஸ் கானின், உடல்எடை குறைந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், சர்ஃபராஸ் கானின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"அட்டகாசமான முயற்சி! பெரும் வாழ்த்துகள். நிச்சயமாக இது ஆட்டத்தை மேம்படுத்தும் மற்றும் நல்ல ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்த வழிவகுக்கும். உனக்கான முக்கியத்துவத்தை மாற்றியமைத்து அதற்காக நேரம் செலவிட்டுள்ளது எனக்குப் பிடித்துள்ளது.
யாராவது இந்தப் புகைப்படத்தை பிரித்வி ஷாவிடம் காண்பிக்க வேண்டும். இதைச் சரி செய்யலாம்" என்று பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
மும்பைக்காக விளையாடி வந்த பிரித்வி ஷா ஒழுக்கமின்மை காரணமாக மும்பை அணியின் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, உள்நாட்டு கிரிக்கெட் பருவம் தொடங்குவதற்கு முன் அண்மையில் மும்பை அணியிலிருந்து விலகிய பிரித்வி ஷா, மஹாராஷ்டிர அணிக்கு மாறினார்.
Sarfaraz Khan | Prithvi Shaw | Kevin Pietersen | Ind v Eng | Ind vs Eng | India vs England | India v England