சஞ்சு சாம்சன், திலக் வர்மா சதங்களில் நொறுங்கிய தெ.ஆ.: டி20 தொடரை வென்றது இந்தியா

2024-ல் 26 டி20 ஆட்டங்களில் 24 வெற்றிகளைப் பெற்று, டி20 உலக சாம்பியன் என்ற பட்டத்துக்கு இந்தியா நியாயம் சேர்த்துள்ளது.
சஞ்சு சாம்சன், திலக் வர்மா சதங்களில் நொறுங்கிய தெ.ஆ.: டி20 தொடரை வென்றது இந்தியா
3 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20யில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி 20 ஆட்டம் ஜோகன்னஸ்பர்கில் இன்று நடைபெற்றது. இந்தத் தொடரில் முதன்முதலாக டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் களமிறங்கின.

முதல் ஓவரில் இந்தியா அடக்கி வாசித்தது. கடந்த இரு ஆட்டங்களில் டக் அவுட் ஆன சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே முதல் ரன்னை எடுத்தார்.

கோட்ஸியா வீசிய 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அதிரடியைத் தொடங்கினார். யான்சென் வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் ஷர்மா ஒரு சிக்ஸர் அடித்து அதிரடியில் இணைந்தார்.

முதல் 6 ஓவர்களில் இந்தியா 6 சிக்ஸர்கள் அடித்தது. மிரட்டலான தொடக்கத்தைக் கொடுத்த அபிஷேக் சர்மா பவர்பிளேயின் கடைசி ஓவரில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

6 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்தது.

சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா இணைந்தார். இந்தக் கூட்டணியைக் கடைசி வரை தென்னாப்பிரிக்காவால் பிரிக்க முடியவில்லை. பிரிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் கேட்சுகளை தவறவிட்டு தென்னாப்பிரிக்கா சொதப்பியது.

இடையில் கோட்ஸியா காயம் காரணமாக வெளியேற, இவரது ஓவர்களை சரிகட்டுவதற்காக மார்க்ரம் பந்துவீசினார். ஸ்டப்ஸையும் ஓவர் வீசச் செய்தார். இது இந்தியாவுக்குப் பலனாக மாறியது.

மஹாராஜ் ஓவரில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 19 ரன்கள். ஸ்டப்ஸ் ஓவரில் இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் என மொத்தம் 21 ரன்கள். மார்க்ரம் ஓவரில் இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் என மொத்தம் 22 ரன்கள் பறந்தன. இடையில் சிபம்லாவைக் கொண்டு வந்தார்கள். இவருடைய ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள்.

8 ஓவர்கள் முடிவில் 89 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, 15 ஓவர்கள் முடிவில் 219 ரன்களுக்கு விரைந்தது.

திலக் வர்மா காட்டிய அதிரடியுடன் ஒப்பிடும்போது, 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய சஞ்சு சாம்சனின் ஆட்டம் நிதானமாகத் தெரிந்தது. அந்த அளவுக்கு சிக்ஸர்களாக நொறுக்கித் தள்ளினார் திலக் வர்மா. 33 பந்துகளில் 87 ரன்களுக்கு விரைந்த திலக் வர்மா, சுரேஷ் ரெய்னாவின் பழைய ஐபிஎல் இன்னிங்ஸை நினைவுபடுத்தினார்.

கடைசி 4 ஓவர்களில் மட்டும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சற்று ஆறுதல் காட்டினார்கள். 17-வது ஓவரில் 10 ரன்கள். 18-வது ஓவரில் 11 ரன்கள்.

டி20 தொடரை சதத்துடன் தொடங்கிய சஞ்சு சாம்சன், இடையில் இருமுறை டக் அவுட் ஆனாலும், இறுதியாக சதம் அடித்து தொடரை நிறைவு செய்தார். 51 பந்துகளில் சதத்தை எட்டிய சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடக்கம்.

மறுமுனையில் சிக்ஸர் மழையைப் பொழிந்த திலக் வர்மா 41-வது பந்தில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை எட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இவர் 47 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 120 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன், திலக் வர்மா இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது.

டி20யில் 22 சிக்ஸர்கள் (வங்கதேசத்துக்கு எதிராக) அடித்ததே இந்திய அணியின் சாதனையாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் 23 சிக்ஸர்கள் விளாசி இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.

284 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க பேட்டர்கள் களமிறங்கினார்கள். இவர்கள் முற்றிலும் வேறொரு ஆடுகளத்தில் விளையாடியது போல இருந்தது. அர்ஷ்தீப் சிங் தனது அற்புதமான இன்ஸ்விங் மூலம் ரீஸா ஹென்ட்ரிக்ஸை முதல் ஓவரிலேயே போல்ட் செய்தார்.

ஹார்திக் பாண்டியா இரண்டாவது ஓவரை மெய்டனாக வீசி மற்றொரு தொடக்க பேட்டரான ரிக்கில்டன்னை வீழ்த்தினார். தனது இரண்டாவது ஓவரில் மார்க்ரமை வீழ்த்தியதுடன் கிளாஸெனை முதல் பந்திலேயே இன்ஸ்விங் செய்து வீழ்த்தி மிரட்டினார் அர்ஷ்தீப்.

முதல் 3 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்கா 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

முதல் 6 ஓவர்களில் இந்தியா 6 சிக்ஸர்கள் அடித்தது. தென்னாப்பிரிக்கா ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டத்தின் முடிவு இதில் தெரிந்துவிட்டது.

ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் டேவிட் மில்லரும் அடைய முடியாத இலக்கை அடையப் போராடத் தொடங்கினார்கள். 6 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள்.

பந்து ஸ்விங் ஆனதால், ரமண்தீப் சிங்கையும் பயன்படுத்தினார்கள். இவருடைய இரண்டாவது ஓவரில் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் அடித்தார். தென்னாப்பிரிக்க அடித்த முதல் சிக்ஸர் ரமண்தீப் சிங் வீசிய 9-வது ஓவரில்தான்.

வருண் சக்ரவர்த்தி ஓவர்களில் 3 சிக்ஸர்களை மைதானத்துக்கு வெளியே அனுப்பி மில்லர் அதகளத்தைத் தொடங்கினார். அந்த அணி 100 ரன்களை நெருங்கியபோது, வருண் பந்திலேயே 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் மில்லர்.

அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ரவி பிஷ்னாய், 43 ரன்கள் எடுத்திருந்த ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். முடிவு தெரிந்ததால், யான்சென் அடித்தால் மட்டுமே ஆட்டத்தில் ஓரளவுக்கு சுவாரஸ்யம் இருக்கும் என்ற நிலை வந்துவிட்டது.

இதைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த ஆட்டத்தைப்போல யான்சென் மீண்டும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்கினார். ஆனால், மற்ற பேட்டர்கள் உதவாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். யான்சென் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

18.2 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது தென்னாப்பிரிக்கா. 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆண்டில் இந்தியா பெறும் 24-வது டி20 வெற்றி இது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in