'டக் அவுட்' ஆன பிறகு சூர்யகுமார் தந்த ஊக்கம்: மனம் திறந்த சஞ்சு சாம்சன்

"எவ்வளவு ரன்கள் அடித்தாலும் சரி, அடுத்த 7 ஆட்டங்களுக்கு நீ (சஞ்சு சாம்சன்) தான் தொடக்க பேட்டர்."
'டக் அவுட்' ஆன பிறகு சூர்யகுமார் தந்த ஊக்கம்: மனம் திறந்த சஞ்சு சாம்சன்
ANI
2 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20யில் சதமடித்த சஞ்சு சாம்சன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் வைத்த நம்பிக்கை மற்றும் ஊக்கம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 டர்பனில் நேற்று நடைபெற்றது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதமடித்து 50 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 107 ரன்கள் விளாசினார். இந்திய அணி கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய ஹைதராபாத் டி20யிலும் சஞ்சு சாம்சன் சதமடித்தார். இதன்மூலம், சர்வதேச டி20யில் அடுத்தடுத்து சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

இவருடைய அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது. சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாய் ஆதிக்கம் செலுத்த தென்னாப்பிரிக்கா 141 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு சஞ்சு சாம்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தனது தோல்விகள், கேள்விகள், ஊக்கம் தந்தவர்கள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

"என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் நிறைய தோல்விகளைச் சந்தித்துள்ளேன். தோல்விகளைச் சந்திக்கும்போது நம்முள் நிறைய குழப்பங்கள் எழும். சமூக ஊடகங்கள் பெரிய பங்கு வகிக்கும் என்பார்கள். ஆனால், நம்மைக் குறித்து நாமே நிறைய சிந்திக்கத் தொடங்குவோம்.

சர்வதேச தரத்துக்கான வீரராக நீ இல்லையா சஞ்சு என்ற கேள்வி எழும். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்படுகிறாய். சர்வதேச கிரிக்கெட்டில் ஏன் நீ சிறப்பாகச் செயல்படுவதில்லை? இதுமாதிரியான சிந்தனைகள் என்னுள் நிறைய எழும். நிறைய ஆண்டுகள் விளையாடிய அனுபவத்திலிருந்து, என்னுடைய திறன் என்ன என்பதை நான் அறிந்துகொண்டேன்.

களத்தில் நிறைய நேரத்தை செலவிட்டால், சுழற்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ஷாட் விளையாடுவதற்கான திறன் என்னிடம் உள்ளது. என்னால், அணிக்கு நிச்சயமாகப் பங்களிக்க முடியும் என எனக்குத் தெரியும். என்னால் அணிக்கு வெற்றி தேடி தர முடியும் என்பதும் எனக்குத் தெரியும்.

சூர்யகுமார் யாதவ், கௌதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லக்‌ஷ்மன் போன்ற ஆதரவான மனிதர்கள் நாம் தோல்வியடையும்போது நம்மை ஆதரிப்பார்கள். நாம் தோல்வியடையும்போது இவர்கள் நம்மிடம் நடத்தும் உரையாடலின் விதம் மிக முக்கியமானது.

நான் தோல்வியடைந்தபோது கௌதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவிடமிருந்து ஃபோன் மூலம் எனக்கு நிறைய அழைப்புகள் வரும். நான் எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பார்கள். சுழற்பந்துவீச்சில் இதைச் சரி செய்ய வேண்டும் என்பார்கள். கேரளத்தில் உள்ள அனைத்து சுழற்பந்துவீச்சாளர்களையும் அழைத்து, சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் பயிற்சி செய். அதைச் செய், இதைச் செய் என அறிவுறுத்துவார்கள்.

டக் அவுட் ஆன பிறகு, இந்திய அணியின் கேப்டன் நம்மை அழைத்து எப்படி பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார் என்றால், கேப்டன் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம். நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அவர் விரும்புகிறார். இதுமாதிரியான சிறிய விஷயங்கள் பெரிய பங்கை வகிக்கும்.

அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றியுடன் இருப்பேன். அணி நிர்வாகத்துக்கு என்னால் நியாயம் சேர்க்க முடியும் என நம்புகிறேன். இது வெறும் தொடக்கம் தான். கடுமையாக பயிற்சி செய்ய விரும்புகிறேன். ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும் அணிக்குப் பங்களித்து நாட்டுக்கு வெற்றி தேடி வர முனைவேன்" என்றார் சஞ்சு சாம்சன்.

முன்னதாக, ஆட்டம் முடிந்தவுடன் ஜியோ சினிமாவிடம் பேசிய சஞ்சு சாம்சன், "துலீப் கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சூர்யகுமார் யாதவ் என்னிடம் பேசினார். அடுத்த 7 ஆட்டங்களில் நீ (சஞ்சு சாம்சன்) தான் இந்தியாவுக்காக தொடக்க பேட்டராக களமிறங்கப்போகிறாய், எவ்வளவு ரன்கள் அடித்தாலும் சரி, 7 ஆட்டங்களுக்கு நீ தான் தொடக்க பேட்டர் என்று சூர்யகுமார் யாதவ் என்னிடம் கூறினார். சூர்யகுமார் யாதவ் தான் எனக்கு உத்தரவாதம் அளித்தார். கேப்டன் நம் மீது நம்பிக்கை நமக்குக் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்" என்றார் சஞ்சு சாம்சன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in