ஆர்ச்சர் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப்: ராஜஸ்தானுக்கு 2-வது வெற்றி

புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 6 அணிகள் உள்ளன.
ஆர்ச்சர் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப்: ராஜஸ்தானுக்கு 2-வது வெற்றி
ANI
2 min read

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முல்லாபூரில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக களமிறங்கும் முதல் ஆட்டம் இது.

சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெயிஸ்வால் தொடக்கத்தில் சற்று நேரம் எடுத்து களத்தின் தன்மையைக் கணித்தார்கள். மார்கோ யான்சென் வீசிய 4-வது ஓவரில் ஜெயிஸ்வால் இரு சிக்ஸர்களை அடித்து அதிரடியைத் தொடங்கினார். 6 ஓவர்களில் ராஜஸ்தான் 53 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களில் விக்கெட்டுகளை 85 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான்.

லாக்கி ஃபெர்குசன் வீசிய 11-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் 40-வது பந்தில் அரை சதம் அடித்தார். அரை சதத்துக்குப் பிறகு இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை அடித்து 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஜெயிஸ்வால். சிஎஸ்கேவுக்கு எதிராகக் கலக்கிய நிதிஷ் ராணா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரியான் பராக் களத்தில் நேரத்தை செலவிட்டு கடைசி 5 ஓவர்களில் ரன் வேகத்தை அதிகரித்தார். குறிப்பாக யான்சென் வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார். ஹெட்மயர் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரில் பராக் ஒரு சிக்ஸரையும், துருவ் ஜுரெல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியையும் அடிக்க, ராஜஸ்தான் அணி 200 ரன்களை தாண்டியது.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரெல் 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாபில் இம்பாக்ட் வீரராக பிரியன் ஆர்யா களமிறங்கினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் பந்திலேயே ஆர்யா போல்டானார். ஆர்ச்சருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இரு பவுண்டரிகளை அடித்தார். முதல் ஓவரிலேயே ஷ்ரேயஸும் போல்டானார். மார்கஸ் ஸ்டாய்னிஸும் பவர்பிளேயிலேயே 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்து பஞ்சாப் தடுமாறியது. மேலும் பின்னடைவாக பிரப்சிம்ரன் சிங் பவர்பிளே முடிந்தவுடன் கார்த்திகேயா பந்தில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நேஹல் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் கூட்டணி அமைத்தார்கள். கார்த்திகேயா வீசிய 10-வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார். நேஹல் வதேரா ஒரு சிக்ஸர் அடித்தார். 10 ஓவர்களில் பஞ்சாப் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது.

அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து விளையாடி வந்த வதேரா, மேக்ஸ்வெல் இணை வெற்றி இலக்கை நோக்கிய பயணத்தை சீராக வைத்திருந்தது. இந்த இணை 52 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தது. 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் 15-வது ஓவரின் கடைசி பந்தில் தவறான நேரத்தில் ஆட்டமிழந்தார்.

33 பந்துகளில் அரை சதம் அடித்த நேஹல் வதேரா 16-வது ஓவரின் முதல் பந்திலேயே 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 29 பந்துகளில் 75 ரன்கள் தேவை என்ற நிலையில் இரு முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்ததால், ஆட்டத்தின் முடிவு 16-வது ஓவரிலேயே தெரிந்தது. 16-வது ஓவரிலிருந்து கடைசி பந்து வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஷஷாங்க் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 13 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.

நடப்பு ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக களமிறங்கிய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 6 அணிகள் உள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in