வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா

பேட்டர்கள் சிக்ஸர் மழை பொழிய இந்திய அணி மொத்தம் 22 சிக்ஸர்கள் குவித்து சாதனை படைத்தது.
வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா
ANI
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20யில் இந்திய அணி 20 ஓவர்களில் 297 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான மூன்றாவது டி20 ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் பதில் ரவி பிஷ்னாய் சேர்க்கப்பட்டார்.

தொடக்க பேட்டராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் இன்று தொடக்கத்திலிருந்தே மிரட்டலான அதிரடி மனநிலையில் இருந்தார். டஸ்கின் அஹமது வீசிய இரண்டாவது ஓவரில் கடைசி நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகள் அடித்து அதகளப்படுத்தினார்.

அபிஷேக் ஷர்மாவை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் அடைந்தாலும், சூர்யகுமார் யாதவ் வந்தது வங்கதேசத்துக்கு மேலும் துன்பமானது. தனது இரண்டாவது பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்தார்.

ஓவருக்கு தலா பவுண்டரி, சிக்ஸர் என இருவரும் விளாசினார்கள். பவர்பிளேயின் கடைசி நான்கு பந்துகளில் சூர்யகுமார் யாதவ் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து மிரட்ட, 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 82 ரன்கள் குவித்தது.

பவர் பிளே முடிந்தவுன் ரன் வேகம் குறைந்துவிடக் கூடாது என சஞ்சு சாம்சன் முதல் மூன்று பந்துகளில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். இதன்மூலம் 22 பந்துகளில் அரை சதம் எட்டினார் சஞ்சு சாம்சன்.

இருவருடைய வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேசம் திணறியது. முஸ்தபிஸுர் ரஹ்மான் வந்தாலும் சிக்ஸர் என்றதால் 10-வது ஓவரை ரிஷத் ஹொசைனிடம் ஒப்படைத்தார் வங்கதேசம் கேப்டன்.

இந்த ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ரன் அடிக்கவில்லை. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள். ஹைதராபாத் மைதானம் சஞ்சு சாம்சன் அதிரடியில் அதிர்ந்துபோனது.

10 ஓவர்களில் இந்திய அணி 152 ரன்களை எட்டியது. சூர்யகுமார் யாதவ் தானும் களத்தில் இருக்கிறேன் என்பதை சிக்ஸர்கள் அடித்து அறிவித்துக் கொண்டிருந்தார். இவர் 23 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

இந்த இணை புயல் வேகத்தில் ரன் குவிக்க, அணியின் ரன் ரேட் 14-க்கு மேல் பயணித்தது. மஹேதி ஓவரில் பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன் 40-வது பந்தில் சதம் அடித்தார்.

சதமடித்த சஞ்சு சாம்சன் 111 ரன்கள் எடுத்திருந்தபோது, முஸ்தபிஸூர் ரஹ்மான் ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் அடுத்த ஓவரிலேயே 35 பந்துகளில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இருந்தபோதிலும், 14-வது ஓவரிலேயே இந்திய அணி 200 ரன்களை எட்டியதால், அடுத்த பேட்டர்களுக்கு அதிரடிக்கான அடித்தளம் அட்டகாசமாக இருந்தது.

பாண்டியா அவருடைய மாஸான பேட்டிங் மூலம் ரன் குவிக்க, ரியான் பராகும் பெரிய சிக்ஸர்களை விளாசினார். 16.4 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்களைக் கடந்தது. பாண்டியா - பராக் இணை 19 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.

சிக்ஸர்கள் பவுண்டரிகளால் நொந்துபோன வங்கதேசம் ஃபீல்டிங்கில் சொதப்பத் தொடங்கியது. எளிதான ரன் அவுட் வாய்ப்பு, கேட்ச் வாய்ப்பு என அனைத்தையும் தவறவிடத் தொடங்கியது.

வாய்ப்பைப் பயன்படுத்தி வங்கதேச பந்துவீச்சாளர்களை பாண்டியா பந்தாடினார். 18-வது ஓவரில் இந்திய அணி 260 ரன்களைத் தாண்டியது.

இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 2017-ல் 260 ரன்கள் குவித்ததே சர்வதேச டி20யில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்தச் சாதனை இன்று முறியடிக்கப்பட்டது.

ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த பாண்டியா, அடுத்த பந்திலேயே ஹெலிகாப்டருக்கு முயன்று பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். இவர் 18 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.

கடைசி பந்தில் ஸ்டிரைக்கில் இருந்த ரிங்கு சிங், சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை நிறைவு செய்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

மங்கோலியாவுக்கு எதிராக 2023-ல் நேபாளம் 314 ரன்கள் குவித்தது. இதுவே இன்றும் சாதனையாக உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக அயர்லாந்துக்கு எதிராக 2019-ல் ஆப்கானிஸ்தான் 278 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

298 ரன்கள் என்ற சாதனை இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்கியது. மயங்க் யாதவ் வீசிய முதல் பந்திலேயே பர்வேஸ் ஹொசைன் ஆட்டமிழந்தார். இதனால், வங்கதேசம் தடுமாற்றத்துடன் தொடங்கியது.

இரு இடக்கை பேட்டர்கள் இருந்ததால் வாஷிங்டன் சுந்தர் 4-வது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் பந்திலேயே தன்ஸித் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ், நிதிஷ் ரெட்டி வீசிய 5-வது ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 5 ஓவர்களில் வங்கதேசம் 59 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேயின் கடைசி ஓவரை ரவி பிஷ்னாய் வீசினார். இரண்டாவது பந்தில் கேப்டன் ஷாண்டோவை வீழ்த்தியது மட்டுமில்லாமல், இதை மெய்டனாகவும் வீசி பிஷ்னாய் மிரட்டினார். தௌஹித் ஹிரிதாய் தடுமாறி வந்ததாலும், லிட்டன் தாஸ் அதிரடி காட்டி வந்தார். 10 ஓவர்களில் வங்கதேசம் 94 ரன்கள் எடுத்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் கடைசி 10 ஓவர்களில் 20.4 ஆக இருந்தது.

ரவி பிஷ்னாய் பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் லிட்டன் தாஸ். இதன்பிறகு, வங்கதேச பேட்டர்கள் யாரும் ஜொலிக்கவில்லை. சர்வதேச டி20யில் கடைசி இன்னிங்ஸில் விளையாடிய மஹ்முதுல்லா 8 ரன்களுக்கு மயங்க் யாதவ் வேகத்தில் ஆட்டமிழந்தார். தௌஹித் ஹிரிதாய் மட்டும் அரை சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.

133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in