
ஜஸ்பிரித் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருப்பதாக அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் கடைசி டெஸ்டிலிருந்து பாதியில் வெளியேறிய பும்ரா, அதன்பிறகு எந்தவோர் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்றாவது ஆட்டத்தில் பும்ரா விளையாடுவார் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரால் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. பிறகு, ஒருநாள் தொடரில் மாற்றம் செய்தபோது, பும்ராவின் பெயர் அதில் இடம்பெறவில்லை.
இதனால், சாம்பியன்ஸ் கோப்பையில் பும்ரா விளையாடுவது சந்தேகம் எனத் தெரிய வந்தது. சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி அணியை அறிவிக்கும்போது பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். பும்ராவினுடையக் காயத்தின் தன்மை குறித்து உறுதிபடத் தகவல்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தொகுப்பாளராக இருக்கும் சஞ்சனா கணேசன், வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் மிராஸிடம் கலந்துரையாடினார். அப்போது, பும்ரா முற்றிலும் மாறுபட்ட ஒரு பந்துவீச்சாளர், அபாயகரமானவர் என்றெல்லாம் அவரைப் பற்றி மெஹிதி ஹசன் உயர்வாகப் பேசினார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் அவர் இல்லாதது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, பும்ராவின் உடல்நிலை குறித்து மெஹிதி ஹசன் கேட்டார். இதற்குப் பதிலளித்த சஞ்சனா கணேசன், "அவர் நலமுடன் உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியெடுத்து வருகிறார்" என்று பதிலளித்தார்.