ஜெயிஸ்வால் சதம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஜெயிஸ்வால் 60 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஜெயிஸ்வால் சதம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
ANI

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயிஸ்வால் சதமடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஜெய்ப்பூரில் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க பேட்டர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டிரென்ட் போல்ட் பந்தில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க பேட்டர் இஷான் கிஷன், சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவரில் 'டக்' அவுட் ஆனார். காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பிய சந்தீப் சர்மா, தனது அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவை வீழ்த்தினார்.

20 ரன்களுக்குள் டாப்-3 விக்கெட்டுகளை இழந்து மும்பை தடுமாறியது. முகமது நபி சற்று அதிரடி காட்டி 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். பவர்பிளேயில் மும்பை 45 ரன்கள் எடுத்தது.

பவர்பிளே முடிந்தவுடன் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்தைக் கையிலெடுக்க, சஹால் சுழலில் நபி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இளம் வீரர் திலக் வர்மா மற்றும் நெஹால் வதேரா கூட்டணி அமைத்தார்கள். இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்ற கணக்கில் சற்று பொறுப்புடன் விளையாடியதால் 13-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது மும்பை.

இருவரும் அதிரடிக்கு கியரை மாற்ற மும்பையின் ரன் வேகம் உயர்ந்தது. குறிப்பாக, சஹால் வீசிய 16-வது ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்ஸரையும், வதேரா இரு சிக்ஸர்களையும் அடிக்க 16-வது ஓவரிலேயே மும்பை 150 ரன்களைக் கடந்தது. திலக் வர்மாவும் இந்த சிக்ஸர் மூலம் 38-வது பந்தில் அரை சதத்தைக் கடந்தார்.

மறுமுனையில் வதேரா அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 24 பந்துகளில் 49 ரன்களுக்கு, போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இணை 52 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து மும்பையைக் காப்பாற்றியது. ஆனால், வதேரா விக்கெட்டுக்கு பிறகு மும்பையின் வேகத்தை அப்படியே கட்டுப்படுத்தியது ராஜஸ்தான். 200 ரன்கள் வரை செல்வார்கள் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், கடைசி இரு ஓவர்களில் அவேஷ் கானும், சந்தீப் சர்மா அட்டகாசமாகப் பந்துவீசினார்கள். 19-வது ஓவரில் அவேஷ் கான் ஒரு பவுண்டரிகூட விடாமல் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து ஹார்திக் பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் திலக் வர்மா, கூட்ஸியா மற்றும் டிம் டேவிட் விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார் சந்தீப் சர்மா.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராஜஸ்தான் தொடக்க பேட்டர்களாக ஜெயிஸ்வால், பட்லர் களமிறங்கினார்கள். கேப்டன் பாண்டியா வீசிய முதல் ஓவரில் பட்லர் இரு பவுண்டரிகள் அடித்தார். பும்ராவும், நுவான் துஷாராவும் நன்றாகப் பந்துவீசினாலும், கூட்ஸியா ஓவரில் ஜெயிஸ்வால் சிக்ஸரும், இரு பவுண்டரியும் அடித்தார். ரன்களைக் கொடுத்தாலும், கூட்ஸியா 150 கி.மீ. வேகத்தில் சிறப்பாகவே இந்த ஓவரை வீசினார்.

பும்ரா வீசிய 5-வது ஓவரில் இரு பவுண்டரிகள், துஷாரா வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் இருவரும் தலா இரு பவுண்டரிகள் அடிக்க 6 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்தது. இந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் சுமார் 30 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழை குறுக்கீட்டுக்குப் பிறகு முகமது நபி மற்றும் பியூஷ் சாவ்லாவைக் கொண்டு வந்தார் பாண்டியா. பலனாக பியூஷ் சாவ்லா சுழலில் 35 ரன்களுக்கு பட்லர் போல்டானார். ஆனால், இந்த விக்கெட் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை.

காரணம், சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பிய ஜெயிஸ்வால், மும்பைப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 31 பந்துகளில் நடப்பு ஐபிஎல் பருவத்தின் முதல் அரை சதத்தை அடித்தார். ராஜஸ்தானின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் 8-க்கு கீழ் குறைந்தது.

அரை சதம் அடித்தவுடன் சாவ்லா ஓவரில் ஜெயிஸ்வால் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு சிக்ஸராக்கினார் வதேரா. நபி வீசிய அடுத்த ஓவரில் சாம்சன் சிக்ஸர் அடித்தார். திலக் வர்மா பந்தைப் பிடிக்க பாய்ந்தபோதிலும், அவரால் அதைப் பிடிக்க முடியவில்லை.

இது போதாதென்று மேற்கொண்டு சாம்சன் கொடுத்த அடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை டிம் டேவிட் தவறவிட்டார்.

இத்தனை கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டால், ஜெயிஸ்வாலும், சாம்சனும் தக்க பாடத்தைப் புகட்டாமலா இருப்பார்கள். பும்ரா ஓவரிலேயே ஜெயிஸ்வால் சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்தார்.

கூட்ஸியா வேகத்தில் மிரட்டினாலும், இவரது ஓவரை சிக்ஸருடன் நிறைவு செய்தார் ஜெயிஸ்வால். 9 விக்கெட்டுகள் மீதமிருக்க வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால் இருவரும் துணிச்சலாகவே பேட் செய்தார்கள்.

ஜெயிஸ்வால் சதமடிப்பதற்காக சாம்சன் கடைசி நேரத்தில் சற்று நிதானம் காட்டினார். திலக் வர்மா வீசிய 19-வது ஓவரில் ஜெயிஸ்வாலும் 59 பந்துகளில் 2-வது ஐபிஎல் சதத்தை எட்டினார். இந்தப் பருவத்தில் ஃபார்ம் இல்லாமல் திணறி வந்த ஜெயிஸ்வால் சதமடித்து வருகையை அறிவித்தார். இதே ஓவரில் பவுண்டரி அடித்து வெற்றியையும் உறுதி செய்தார்.

18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெயிஸ்வால் 60 பந்துகளில் 104 ரன்களும், சாம்சன் 28 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாய் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in