இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஜெயசூர்யாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்ரல் 2022 முதல் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த கிறிஸ் சில்வர்வுட்டின் பதவிக்காலம் 2024 டி20 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனது ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க விரும்பாத கிறிஸ் சில்வர்வுட் அப்பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் இலங்கை அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராக கடந்த ஜூலையில் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என பல வெற்றிகளைக் குவித்துள்ளது இலங்கை. இதைத் தொடர்ந்து ஜெயசூர்யாவின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயசூர்யா பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாகும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அறிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை அணியின் தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த ஜெயசூர்யா, டி20 உலகக் கோப்பை 2024-ல் இலங்கை அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டார்.