ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்துள்ளார் சமோவா நாட்டின் பேட்டர் டேரியஸ் விஸ்ஸர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த பெருமையை யுவ்ராஜ் சிங், கிரோன் பொலார்ட், திபேந்திர சிங் ஆகியோர் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வனுவாட்டு அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததோடு அந்த ஓவரில் 39 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேரியஸ் விஸ்ஸர்.
28 வயது டேரியஸ், நலின் நிபிகோ என்கிற பந்துவீச்சாளரின் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அந்த ஓவரில் 3 நோ பால்கள் வீசப்பட்டதால் ஒரு ஓவரில் சமோவா அணிக்கு 39 ரன்கள் கிடைத்தன. இதற்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் ஒரு ஓவரில் 39 ரன்கள் எடுத்ததில்லை. டேரியஸ் 62 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார்.