கோபத்தால் வெளியேறிய மே.இ. தீவுகள் வீரர்: பயிற்சியாளர் அதிருப்தி

நாங்கள் நண்பர்களாகவே இருப்போம். இருப்பினும், அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
கோபத்தால் வெளியேறிய மே.இ. தீவுகள் வீரர்: பயிற்சியாளர் அதிருப்தி
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அல்ஸாரி ஜோசப் செய்த செயலுக்கு, மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் மே.இ. தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என வென்றது.

இந்த ஆட்டத்தில் அல்ஸாரி ஜோசப் செய்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய அல்ஸாரி ஜோசப் ஃபீல்டர்களை நிறுத்துவது தொடர்பாக கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதே ஓவரில் இங்கிலாந்து வீரர் காக்ஸின் விக்கெட்டை வீழ்த்திய ஜோசப், வீரர்களுடன் அந்த விக்கெட்டை கொண்டாடாமல் அடுத்தப் பந்தை வீசத் தயாரானார்.

இதன் தொடர்ச்சியாக அந்த ஓவர் முடிந்தவுடன் மிகவும் கோபமாக அல்ஸாரி ஜோசப் வெளியேறினார். இதனால் அடுத்த ஓவரில் மே.இ. தீவுகள் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

இதைத் தொடர்ந்து 6-வது ஓவரின் தொடக்கத்தில் மீண்டும் களத்திற்கு வந்தார் ஜோசப். இவர் செய்த இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக மே.இ. தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சமி, “அல்ஸாரி ஜோசப் செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் நண்பர்களாகவே இருப்போம். இருப்பினும், நான் உருவாக்க நினைக்கும் கலாசாரத்தில் அவர் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து நிச்சயமாக அவரிடம் பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

6-வது ஓவரின் தொடக்கத்தில் மீண்டும் களத்திற்கு வந்த ஜோசப், அவர் பந்துவீசும் போது ஃபீல்டிங்கில் நடந்த ஒரு சில தவறுகளால் கோபமடைந்து மீண்டும் களத்தை விட்டு வெளியேறினார். இதன் பிறகு மீண்டும் களத்துக்கு வந்து பந்துவீசினார்.

இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய ஜோசப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in