விக்டோரியா அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவரிடம் தவறாக நடந்துக் கொண்ட காரணத்துக்காக, ஆஸ்திரேலியாவில் பயிற்சி வழங்க முன்னாள் இலங்கை வீரருக்கு 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1993 முதல் 1995 வரை இலங்கைக்காக 7 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார் துலீப் சமரவீரா. இவர் விக்டோரியா மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், மகளிருக்கான பிபிஎல் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
முன்னதாக விக்டோரியா மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுபேற்ற இரண்டே வாரங்களில் தனது பதவியிலிருந்து விலகினார் சமரவீரா.
இந்நிலையில் இவர் வீராங்கனை ஒருவரிடன் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஆஸ்திரேலியாவில் பயிற்சி வழங்க 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்டோரியா அணியின் தலைமைச் செயல் அதிகாரி நிக் கம்மின்ஸ், “சமரவீராவின் செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.