
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாவதை ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு உறுதி செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் பும்ராவின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாததால், பிஜிடி தொடரின் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து நேதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டார். இவருக்குப் பதில் சாம் கோன்ஸ்டஸ் சேர்க்கப்பட்டார்.
மேலும், ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, ஜை ரிச்சர்ட்சன் மற்றும் ஷான் அபாட் அணியில் சேர்க்கப்பட்டார்கள். அடிலெய்ட் டெஸ்டுக்கு முன்பு சேர்க்கப்பட்ட பியூ வெப்ஸ்டர் ஆஸ்திரேலிய அணியில் தக்கவைக்கப்பட்டிருந்தார்.
மெல்போர்ன் டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மெல்போர்ன் டெஸ்டில் 19 வயது சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாவதை அவர் உறுதி செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்காக விளையாடும் 4-வது இளம் வீரர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.
சமீபத்தில் இந்திய அணி விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் பிரதமர் XI அணிக்காக விளையாடி சதமடித்து கவனம் பெற்றார் சாம் கோன்ஸ்டஸ்.
டிராவிஸ் ஹெட் காயம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், டிராவிஸ் ஹெட் மெல்போர்னில் விளையாடுவார் என மெக்டொனால்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஸ்காட் போலண்ட் விளையாடுவதை உறுதி செய்த அவர், மிட்செல் மார்ஷ் முழு உடற்தகுதியுடன் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
மற்றபடி, கிறிஸ்துமஸ் அன்று பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, விளையாடும் லெவன் அறிவிக்கப்படும் என்று மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.