சாம் கரன் அரை சதம்: தில்லியை வீழ்த்திய பஞ்சாப்!

லிவிங்ஸ்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றியை உறுதி செய்தார்.
சாம் கரன் அரை சதம்: தில்லியை வீழ்த்திய பஞ்சாப்!

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சாம் கரன் அரை சதம் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகள் சண்டிகரில் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

453 நாள்களுக்குப் பிறகு களத்துக்குத் திரும்பிய ரிஷப் பந்த் தில்லி கேபிடல்ஸை வழிநடத்தினார். தில்லி தொடக்க பேட்டர்களாக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் களமிறங்கினார்கள். இருவரும் அதிரடியுடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், மார்ஷ் 20 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பவர்பிளேயில் தில்லி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.

வார்னர் 29 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்ஷல் படேலின் குறைவேக ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இவர்களது விக்கெட்டை தொடர்ந்து, ஷை ஹோப்பும் சிறப்பாகவே இன்னிங்ஸை கட்டமைத்தார். இவரும் தொடக்கத்தைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 33 ரன்களுக்கு ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 13 பந்துகளில் 2 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்டர்கள் எவரும் பெரிதளவில் ரன் குவிக்காததால், 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே தில்லி எடுத்திருந்தது.

கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இம்பாக்ட் வீரராகக் களமிறங்கிய அபிஷேக் பொரெல் கடைசி ஓவரில் இரு சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் விளாசப்பட்டதால் தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து நம்பிக்கையான ஸ்கோரை எட்டியது.

இலக்கை விரட்டிய பஞ்சாபுக்கும் பேட்டிங் சரியாக அமையவில்லை. கேப்டன் ஷிகர் தவன் 22 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மா பந்தில் போல்டானார். பேர்ஸ்டோ 9 ரன்களில் பந்துவீச்சாளர் முனையில் ரன் அவுட் ஆனார். பிரப்சிம்ரன் 26 ரன்கள் எடுத்து பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழந்தார்.

4-வது வரிசையில் களமிறக்கப்பட்ட சாம் கரன் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, சேஸிங்கை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். இவர் 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். லிவிங்ஸ்டன் இவருக்கு சரியான ஒத்துழைப்பைத் தந்து விளையாடி இலக்கை நெருங்கியவுடன் அதிரடிக்கு மாறினார். சாம் கரன் ஆட்டமிழந்தாலும், லிவிங்ஸ்டன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து பஞ்சாப் வெற்றியை உறுதி செய்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த பஞ்சாப் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

47 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சாம் கரன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in