இறுதிக் கட்டத்தில் தெவாடியா அதிரடி: பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாபுக்கு பிரப்சிம்ரன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். சந்தீப் வாரியர் வீசிய 2-வது ஓவரில் இவர் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடிக்க அந்த அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது.

மோஹித் சர்மா வீசிய பவர்பிளேயின் கடைசி ஓவரில் பிரப்சிம்ரன் 21 பந்துகளில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.

பவர்பிளேவுக்கு பிறகு குஜராத் சுழற்பந்துவீச்சாளர்களிடம் சரணடைந்து பஞ்சாப் பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ரஷித் கான் சுழலில் சாம் கரன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரூசோவ் மற்றும் லிவிங்ஸ்டனை நூர் அஹமது வீழ்த்தினார்.

இந்த ஐபிஎல் பருவத்தில் பஞ்சாபுக்காகத் தொடர்ந்து போராடி வந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மாவை சொற்ப ரன்களில் வெளியேற்றினார் சாய் கிஷோர். ஹர்பிரீத் பிரார் மட்டும் சற்று அதிரடி காட்டி 12 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். இதனால், அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாய் கிஷோர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குஜராத் தொடக்க பேட்டர்களாக ரித்திமான் சஹா, ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். சஹா 1 பவுண்டரி மட்டும் அடித்து 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் கூட்டணி அமைத்தார்கள். பவர்பிளே முடிவில் குஜராத் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்தது.

35 ரன்கள் எடுத்த கில்லை, லிவிங்ஸ்டன் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மில்லரையும் போல்ட் செய்து லிவிங்ஸ்டன் ஆட்டத்தில் திருப்புமுனையை உண்டாக்கினார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் சற்று உயரத் தொடங்கியதால், ஓமர்ஸாய் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு நெருக்கடியை சற்று தணித்தார்.

கூட்டணியைப் பிரிக்க கேப்டன் சாம் கரன் பந்தைக் கையிலெடுத்தார். பலனாக சாய் சுதர்சன் 34 பந்துகளில் 31 ரன்களுக்கு போல்டானார். அடுத்த ஓவரிலேயே ஓமர்ஸாயை வீழ்த்தினார் ஹர்ஷல் படேல். 5 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத்துக்குக் கடைசி 4 ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டன.

ஹர்பிரீத் பிரார் வீசிய 17-வது ஓவரில் தெவாடியா இரு பவுண்டரிகளை அடிக்க இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தன. ரபாடா வீசிய 18-வது ஓவரில் ஷாருக் கான் ஒரு சிக்ஸர், தெவாடியா 3 பவுண்டரிகள் விளாச குஜராத் வெற்றிக்கு கடைசி இரு ஓவர்களில்ல 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.

19-வது ஓவரை சிறப்பாக வீசிய ஹர்ஷல் படேல் 4 ரன்களை மட்டும் கொடுத்து முதல் பந்தில் ஷாருக்கானையும், கடைசிப் பந்தில் ரஷித் கானையும் ஆட்டமிழக்கச் செய்தார். எனினும் கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்த தெவாடியா முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டி குஜராத் வெற்றியை உறுதி செய்தார்.

19.1 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்த குஜராத் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தெவாடியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in