
ரெடிட் தளத்தில் ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக 3 BHK படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரெடிட் தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், "தாங்கள் எப்போதெல்லாம் படம் பார்ப்பீர்கள், தங்களுக்குப் பிடித்த படம் எது" என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு, "நேரம் கிடைக்கும்போது நல்ல படங்களைப் பார்க்க பிடிக்கும். அண்மையில் நான் பார்த்து எனக்குப் பிடித்த இரு படங்கள் 3 BHK மற்றும் மராட்டியப் படமான "Ata Thambyacha Naay"" என்று சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார்.
சச்சினின் இந்தப் பதிலுக்கு 3 BHK படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜோ ரூட் பற்றியும் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், "13 ஆயிரம் டெஸ்ட் ரன்களை கடப்பது என்பது அட்டகாசமான சாதனை. இன்னும் வலிமையாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஜோ ரூட்டை நான் முதன்முதலில் 2012-ல் நாக்பூரில் பார்த்தபோது, இங்கிலாந்தின் வருங்கால கேப்டன் என சக வீரர்களிடம் தெரிவித்தேன். அவரால் ஆடுகளத்தைச் சரியாகக் கணிக்க முடிந்தது, ஸ்டிரைக்கை மாற்றிக்கொண்டே இருந்தார். இவை இரண்டும் என்னைக் கவர்ந்தது. இவர் பெரிய வீரராக வருவார் என்பது அப்போதே தெரிந்தது" என்றார் சச்சின் டெண்டுல்கர்.
டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தச் சாதனையை முறியடிக்க ஜோ ரூட் இன்னும் 2,378 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
Sachin Tendulkar | 3 BHK | Sri Ganesh | Joe Root | Reddit