பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் நானா?: மௌனம் கலைத்த சச்சின்! | Sachin Tendulkar | BCCI |

செப்டம்பர் 28-ல் பிசிசிஐ தலைவர், ஐபிஎல் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பிசிசிஐ-யின் அடுத்த தலைவர் நானா?: மௌனம் கலைத்த சச்சின்! | Sachin Tendulkar | BCCI |
1 min read

பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுதொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.

பிசிசிஐ-யின் 36-வது தலைவராக ரோஜர் பின்னி அக்டோபர் 2022-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். பிசிசிஐ-யின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 28-ல் நடைபெறவுள்ளது. அதுவரை பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி தொடர்வார் எனத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், 70 வயதை அடைந்தவுடன் செப்டம்பர் தொடக்கத்தில் பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ரோஜர் பின்னி விலகிக் கொண்டார். பிசிசிஐ விதிப்படி ஒருவர் 70 வயதை அடைந்தவுடன், அவர் பதவி விலகிக்கொள்ள வேண்டும். 70 வயதுக்கு மேல் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாது. பிசிசிஐ தலைவர் அருண் துமால் 6 ஆண்டுகளாக நிர்வாகப் பணிகளைக் கவனித்து வருவதால், அவரும் கட்டாய இடைவெளியை எடுத்துள்ளார்.

செப்டம்பர் 28-ல் வருடாந்திரப் பொதுக்கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்கானத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே, பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு சச்சின் டெண்டுல்கர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவெட் லிமிடெட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது அல்லது பரிசீலனை செய்யப்பட்டுள்ளது என்ற செய்திகளும் வதந்திகளும் எங்களுடைய கவனத்துக்கு வந்தன. அதுமாதிரி எதுவும் நிகழவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிசிசிஐ-யின் அடுத்த தலைவராக சச்சின் டெண்டுல்கர் பொறுப்பேற்கவுள்ளார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Sachin Tendulkar | BCCI | BCCI President | BCCI Elections | BCCI Election | BCCI AGM |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in