
சச்சின் மகள் சாரா, லண்டனில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். இன்ஸ்டகிராமில் தொடர்ந்து புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிடுவதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் தனது மகளைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக சாரா பொறுப்பேற்றுள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார். லண்டனில் மருத்துவத்தில் பட்டம் பெற்றுள்ள சாரா - விளையாட்டு, சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் இந்தியாவை மேம்படுத்தும் இந்தப் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பாக ஒரு மாதத்துக்கு முன்பு ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கிராமத்துக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் உடல்நலன், ஆரோக்கியம் குறித்து அறிவுரைகள் வழங்கினார் சாரா டெண்டுல்கர்.
அந்தக் கிராமத்துப் பெண்கள் செவிலியராகவும் சமூகப் பணியாளராகவும் தங்களுடைய கிராமத்துக்குச் சேவை செய்ய ஆர்வம் செலுத்துவதை எண்ணி வியந்து இன்ஸ்டகிராமில் ஒரு பதிவும் அவர் எழுதியிருந்தார்.
ஒரு சிறிய மாற்றம் கூட ஒட்டுமொத்த கிராமத்தையும் பலப்படுத்தும் எனபதை, தான் உணர்ந்ததாகவும் சாரா கூறியிருந்தார்.