சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எஸ் ஸ்ரீராமை உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஸ்டீஃபென் ஃபிளெமிங் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவில் மைக் ஹசி பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். எரிக் சைமன்ஸ் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார். பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த டுவெயின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிஎஸ்கேவின் உதவிப் பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியில் ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் கோபால், நூர் அஹமது, தீபக் ஹூடா, ரச்சின் ரவீந்திரா என பந்தைச் சுழற்ற ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், சுழற்பந்துவீச்சு ஆலோசனைக்குப் பெயர் போன ஸ்ரீராம் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ். ஸ்ரீராம் இந்தியாவுக்காக 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளராக இருந்தார்.
2022-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் கைக்கோத்தார். அதே ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச டி20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2023-ல் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிறகு, 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் வங்கதேச அணியின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் தில்லி டேர்டெவில்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் முன்பு பணியாற்றியுள்ளார்.
ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை மார்ச் 23 அன்று சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.