100 கிராம் கூடுதல் எடையை அனுமதித்தால், ஒரு சிலர் 200 கிராம் அளவு தானே எங்களையும் அனுமதியுங்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் என்று உலக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் நிநாட் பேட்டி அளித்துள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் உலக மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் நிநாட்.
நிநாட் பேசியதாவது
“விதிகளை மதிக்க வேண்டும். அவருக்கு இவ்வாறு நடந்தது வருத்தமாக உள்ளது. ஆனால், விதிகளை மாற்ற முடியாது. அனைத்து வீரர்களும் விதிகளை மதிக்கும்போது, எடை அதிகம் கொண்ட ஒருவரை விளையாட அனுமதிக்கமுடியாது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அடுத்த நாளில் உடல் எடையைப் பரிசோத்துப் பார்பார்கள் என்பது தெரியும். எனவே விளையாட்டின் விதிகளைப் பற்றி தெரிந்த அனைவரும் அந்த விதிகளை மதிக்க வேண்டும். விதிகளை மாற்ற முடியாது.
உடல் எடையைக் குறைப்பதற்காக சில முயற்சிகளை வீரர்கள் மேற்கொள்கிறார்கள். அதனால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்படும். வீரர்கள், அவர்களின் இயல்பான எடையில் பங்கேற்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக, இந்த ஒலிம்பிக்ஸில் 2-வது முறையாக இதுபோன்று நடக்கிறது. ஒருநாள் முன்னதாக, ஒரு இத்தாலிய மல்யுத்த வீரரும் சரியான எடையில் இல்லாத காரணத்தால், அவர் போட்டியிடவில்லை.
பதக்கத்துக்கான ஆட்டமாக இருந்தாலும் சரி, லீக் ஆட்டங்களாக இருந்தாலும் சரி அனைத்தும் ஒன்று தான். என்னால் என்ன செய்ய முடியும்? வினேஷின் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது.
கடந்த வருடங்களில் அவரது திறமையைக் கண்டு வியந்திருக்கிறேன். உலக சாம்பியன்ஷிப் போன்ற பெரிய போட்டிகளுக்கு முன்பு தங்களை தயார் செய்யும் காலம் இது. அங்கு கூடுதலாக 1 அல்லது 2 கிலோ எடை அதிகமாக இருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், ஏற்கெனவே 5 கிலோ எடையைக் குறைத்துவிட்டு, இதுபோன்று ஒரு கிலோவுக்காகப் போராடுவது தான் பிரச்னை. ஒரு கிலோ என்பது ஒன்றுமில்லை. ஒரு சில வீரர்கள் தங்களின் இயல்பான எடையில் இருந்து பாதியைக் குறைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
100 கிராம் அளவு தானே, அனுமதிக்கலாமே என்று கேட்கிறீர்கள். அப்படி அதை அனுமதித்தால் சிலர் 200 கிராம் அளவு தானே என்று கேள்வி எழுப்புவார்கள். இனி எந்த முடிவையும் மாற்ற முடியாது.” என்றார்.