
முஹமது ஷமியின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடுகையில் மாதம் ரூ. 4 லட்சம் குறைவு தான் என அவரைப் பிரிந்து வாழும் மனைவி ஹசின் ஜஹான் கூறியுள்ளார்.
முஹமது ஷமி மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி ஹசின் ஜஹானுக்கு ஏப்ரல் 2014-ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் பெண் குழந்தை உள்ளது. 2018-ல் முஹமது ஷமி மீது ஹசின் ஜஹான் துன்புறுத்தல் புகாரளித்தார். இதன் அடிப்படையில் ஷமி மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதையடுத்து, முஹமது ஷமி தனக்கு மாதம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என ஹசின் ஜஹான் மாஜிஸ்திரேட் முன் மனு தாக்கல் செய்தார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாதம் ரூ. 1.3 லட்சம் வழங்க வேண்டும் என முஹமது ஷமிக்கு உத்தரவிடப்பட்டது. முன்பு மனைவிக்கு எந்த நிதியுதவியும் தரத் தேவையில்லை, குழந்தைக்கு மாதம் ரூ. 80 ஆயிரம் நிதியுதவியாக வழங்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதான் பிற்பாடு உயர்த்தப்பட்டது.
முஹமது ஷமி மாதம் ரூ. 1.3 லட்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முஹமது ஷமி, பிரிந்து வாழும் மனைவி மற்றும் குழந்தைக்கு மாதந்தோறும் ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்புக்குப் பிறகு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹசின் ஜஹான் கூறியதாவது:
"முஹமது ஷமியின் வாழ்க்கை முறையுடன் ஒப்பிடுகையில் ரூ. 4 லட்சம் என்பது குறைவு தான். 4 வருடங்களுக்கு முன் நாங்கள் ரூ. 10 லட்சம் கோரியிருந்தோம். வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கான செலவு தற்போது அதிகரித்துவிட்டது. நாங்கள் மீண்டும் கோரிக்கை வைப்போம். இந்தத் தீர்ப்பு எனக்கு மிகப் பெரிய வெற்றி. ஆனால், என் மகளைப் பார்த்துக்கொண்டு அவளுடைய தேவையைப் பூர்த்தி செய்ய எங்களுக்கு இன்னும் கூடுதல் பணம் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் இம்தியாஸ் அஹமது, "விசாரணை நீதிமன்றத்தில் இது ரூ. 6 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது. காரணம், ஹசின் ஜஹான் தனது மனுவை ரூ. 7 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் கோரியுள்ளார்" என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.