பட்லரின் அதிரடிச் சதத்தால் கேகேஆர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்!

கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பட்லர் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.
பட்லரின் அதிரடிச் சதத்தால் கேகேஆர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்!
பட்லரின் அதிரடிச் சதத்தால் கேகேஆர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்!ANI

கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

சுனில் நரைன் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட, சால்ட் 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு ரகுவன்ஷி, நரைனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட 11-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது கேகேஆர் அணி. ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ஐயர் 11 ரன்களிலும், ரஸ்ஸல் 13 ரன்களிலும் வெளியேற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய நரைன் சதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் சதமாகும். இதைத் தொடர்ந்து அவர் 6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முடிவில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. அவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெயிஸ்வால் அதிரடியாக தொடங்கினாலும் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சாம்சனும் 12 ரன்களில் வெளியேற பட்லர் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 50 ரன்கள் எடுத்தனர். பராக் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஜுரெல் 2 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும், அதிகம் எதிர்பார்த்த ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இதனால் 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து தடுமாறியது ராஜஸ்தான் அணி. பட்லர் மட்டும் தனியாக போராடி ஒருபக்கம் களத்தில் இருந்தார். 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணிக்கு 79 ரன்கள் தேவைப்பட்டது. பவல், பட்லருடன் ஜோடி சேர்ந்தார்.

நரைனின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை அடித்த பவல் அதே ஓவரில் 26 ரன்களில் வெளியேறினார். 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய ஸ்டார்க் 18 ரன்களை கொடுத்தார். 19-வது ஓவரில் 19 ரன்களை எடுத்தார் பட்லர்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. பட்லர் 98 ரன்களில் களத்தில் இருந்தார். வருண் சக்கரவர்த்தி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அற்புதமான சதத்தை அடித்தார் பட்லர். அடுத்த மூன்று பந்துகளிலும் ரன் இல்லை. 5-வது பந்தில் 2 ரன்களை எடுக்க ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 6-வது வெற்றியை பெற்று தந்தார் பட்லர்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகமான இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது ராஜஸ்தான் அணி. 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பட்லர் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in