லக்னௌவை வீழ்த்தி ஆதிக்கத்தை உறுதி செய்த ராஜஸ்தான் அணி!

ராஜஸ்தான் அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தான் அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.
ராஜஸ்தான் அணி தனது 8-வது வெற்றியை பதிவு செய்தது.ANI

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய 2-வது ஆட்டத்தில் லக்னௌ - ராஜஸ்தான் அணிகள் லக்னௌவில் விளையாடின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

லக்னௌ அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. டி காக் 8 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேற 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னௌ அணி. இதன் பிறகு கேப்டன் ராகுலும், தீபக் ஹூடாவும் அதிரடியான கூட்டணியை அமைத்தனர்.

இருவரும் சிறாப்பாக விளையாட 10.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது லக்னௌ அணி. இருவரும் அரை சதம் அடித்தனர். 115 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். 7 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார் தீபக் ஹூடா.

இதன் பிறகு பூரன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ராகுல் அதிரடியாக விளையாடி 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. பதோனி 18 ரன்களும், கிருனாள் பாண்டியா 15 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் மற்றும் ஜெயிஸ்வால் நல்ல தொடக்கத்தை அமைத்து தந்தனர். இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. பட்லர் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயிஸ்வாலும் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய ரியான் பராக் 14 ரன்களில் ஆட்டமிழக்க சாம்சன் மற்றும் துருவ் ஜூரெல் அதிரடியான கூட்டணியை அமைத்தனர். இருவரும் அரை சதம் அடித்து ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் இலக்கை சுலபமாக எட்டினர். லக்னௌ அணி 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் எந்த பலனும் இல்லை.

இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8-வது வெற்றியை பதிவு செய்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சாம்சன் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 33 பந்துகளில் 71 ரன்களும், துருவ் ஜூரெல் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in