ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளை விமர்சித்து நடுவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டுகள், 5 டி20 கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டௌனில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 180 ரன்களும் மேற்கிந்தியத் தீவுகள் 190 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 310 ரன்கள் எடுத்து 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மேற்கிந்தியத் தீவுகள் 141 ரன்களுக்கு சுருண்டு 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த டெஸ்டில் நடுவர்களின் சர்ச்சைக்குரிய முடிவுகள் பல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரானதாக அமைந்தன.
டெஸ்ட் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ராஸ்டன் சேஸ், நடுவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து பேசினார்.
"இந்த டெஸ்ட் எனக்கும் அணிக்கும் எரிச்சலூட்டக்கூடியது. கேள்விக்குள்ளாக்க வேண்டிய முடிவுகள் பல இருந்தன. அவை எதுவும் எங்களுக்குச் சாதகமானதாக அமையவில்லை.
ஒரு வீரராக தன்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் செலவிட்டுப் போராடுகிறீர்கள். ஆனால் எதுவும் சாதகமானதாக அமையவில்லை. நானும் ஷை ஹோப்பும் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். சில கேள்விக்குள்ளாக்கவேண்டிய முடிவுகள் இருந்தன. இந்த முடிவுகள் ஆஸ்திரேலியாவைவிட அதிக ரன்கள் முன்னிலை பெறுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
இந்த முடிவுகளால் யாராக இருந்தாலும் வருத்தமடைவார்கள் வேதனையடைவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறீர்கள், முழு அர்ப்பணிப்பையும் செலுத்துகிறீர்கள்... ஆனால் அனைத்தும் உங்களுக்கு எதிராக நடந்தால், அது எரிச்சலூட்டும். காரணம், வீரர்கள் நாங்கள் எல்லை மீறி செயல்பட்டால், கடுமையாக அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், ஆட்ட நடுவர்களுக்கு எதுவும் நடப்பதில்லை.
தவறான முடிவு அல்லது கேள்விக்குள்ளாக்கப்படும் முடிவை வழங்கினாலும், அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு தவறான முடிவு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை ஆக்கவும் செய்யலாம் அழிக்கவும் செய்யலாம். ஒருவருக்கு எதிரான அப்பட்டமான முடிவை எடுக்கும்போது, நடுவர்களுக்கும் ஏதேனும் அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும்" என்றார் ராஸ்டன் சேஸ்.