முடிவை நெருங்குகிறாரா ரோஹித் சர்மா?

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோற்றால், ரோஹித் சர்மாவின் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் தடுமாற்றம் மெல்போர்ன் டெஸ்டிலும் தொடர்ந்துள்ளது.

ரோஹித் சர்மா 66 டெஸ்டுகளில் விளையாடி, 12 சதங்களும் 18 அரை சதங்களும் எடுத்துள்ளார். சராசரி 41.24 ரன்கள்.

எனினும் இந்தப் பருவத்தில் ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பும் பேட்டிங்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சொந்த மண்ணில் ரோஹித் தலைமையில் விளையாடிய இந்திய அணி நியூசிலாக்கு எதிரான தொடரில் மூன்று டெஸ்டுகளிலும் தோற்று அவமானப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பும்ரா தலைமையில் முதல் டெஸ்டை விளையாடிய இந்திய அணி அட்டகாசமான வெற்றியைப் பெற்றது. அடுத்த டெஸ்டிலிருந்து தலைமைப் பொறுப்பை ரோஹித் சர்மா மீண்டும் ஏற்றார். அதிலிருந்து அணியின் தோல்வியும் தள்ளாட்டமும் மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது.

2-வது டெஸ்டில் மோசமாகத் தோற்ற இந்திய அணி பிரிஸ்பேனில் மழை காரணமாகத் தோல்வியிலிருந்து தப்பித்தது. 4-வது டெஸ்டிலும் 2-வது நாள் வரை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

பேட்டிங்கிலும் ரோஹித் சர்மாவுக்கு இது போதாத காலம். 2024-ல் சொந்த மண்ணில் இங்கிலாந்து எதிராக விளையாடிய டெஸ்ட் தொடரில் இரு சதங்கள் அடித்த ரோஹித் சர்மா இந்தப் பருவத்தில் மிக மோசமாக விளையாடி வருகிறார். வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் விளையாடிய 14 இன்னிங்ஸில் 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அவருடைய பேட்டிங் பார்க்கவே பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அணியில் அவருடைய இடமும் கேப்டன் பதவியும் ஆபத்தான நிலைமையில் உள்ளது.

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோற்றால், ரோஹித் சர்மாவின் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in