ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள். எனவே, ஒருநாள் தொடரில் இருவரையும் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா வசம் இருந்த கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் கில் முதல்முறையாக முழு நேர கேப்டனாக செயல்படுகிறார். விராட் கோலியும் சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு தற்போது தான் இந்திய அணிக்காகக் களத்துக்குத் திரும்புகிறார்.
இப்படி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார்கள். ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த ரோஹித் சர்மா 8 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
2027 உலகக் கோப்பை வரை இருவரும் அணியில் இருப்பார்களா என்பது உறுதிபடத் தெரியாத சூழலில் இருவரும் களமிறங்குவதால், இவர்களுடைய உடற்தகுதி மற்றும் பேட்டிங் எப்படி இருக்கும் எனப் பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டு ரசிகர்கள் ஆரவாரமாக இருந்தார்கள். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான ஞாயிறு பொழுதாக மாறிவிட்டது.
கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இந்திய அணி 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மழை குறுக்கிட்டு வருவதால், ஆட்டம் அடிக்கடி தடைகளைச் சந்தித்து வருகிறது. இந்திய நேரப்படி பகல் 12.35 மணி நிலவரப்படி இந்திய அணி 14.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 35 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு இடமில்லை. நிதிஷ் குமார் ரெட்டி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.
Ind v Aus | Perth ODI | India v Australia | Rohit Sharma | Virat Kohli | Josh Hazlewood |