இந்திய டி20 அணியில் மீண்டும் ரோஹித், கோலி!

இந்திய டி20 அணியில் மீண்டும் ரோஹித், கோலி!
ANI
1 min read

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி விளையாடவிருக்கும் கடைசி டி20 தொடர் இது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்தபிறகு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டி20 ஆட்டங்களில் விளையாடவில்லை. ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்கள்.

ரோஹித் சர்மா இல்லாத நேரங்களில் ஹார்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே டி20யில் இந்திய அணியை வழிநடத்தி வந்தார்கள். உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஹார்திக் பாண்டியா குணமடைந்து வருகிறார். பாண்டியா இல்லாத சமயத்தில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்தி வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தினார். சூர்யகுமார் யாதவுக்கும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. இருவருமே ஐபிஎல் போட்டிக்கு முன்பு முழு உடற்தகுதியடைந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க பயணத்தின்போது தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் நடத்திய ஆலோசனையில் டி20 அணிக்குத் திரும்புவது குறித்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இதன்பிறகு, இவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெயிஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், அவேஸ் கான், முகேஷ் குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in