
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்பது குறித்து தற்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் முடிவடைகிறது.
இதனிடையே முதல் டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா, “பெர்த் டெஸ்டில் பங்கேற்பது குறித்து தற்போது உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்தியாவில் ஒருமுறை டெஸ்ட் தொடரை வெல்லாத நியூசிலாந்து, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 3-0 என வீழ்த்தி வரலாறு படைத்தது. சொந்த மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்று மிகவும் மோசமான சாதனையை படைத்தது இந்தியா.
இந்நிலையில் இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்றில் பங்கேற்க இத்தொடரில் இந்திய அணி குறைந்தது 4 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.